Monday, August 18, 2025

(ஒரு) கல் - கண்ணாடி


காதல் முதல்
மோதல் வரை 
கல் - கண்ணாடி 
பேசப்பட்டாகிட்டு அன்பே
ஆனால் காதல் -மோதல்
இரண்டிலும் என்னவோ
உடைவது கண்ணாடி மட்டும் தான்
கல் எப்படியோ பிழைத்துக்கொள்கிறது
இதை யாராவது எழுதியிருக்கின்றார்களா?

ஆயுதப் போரிலும்
ஆழ்ந்த காதலிலும் கூட
இது தானே தத்துவம்
ஒன்று இழக்கப்பட 
ஒன்று காயப்பட
ஒன்று அழிந்தொழிய 
ஒன்று இல்லாமலாக்கப்பட 
முடிந்தால் மட்டும் தானே 
மற்றொன்று உயிர் பெறுகின்றது – அல்லது
வெற்றி கொள்கின்றது…… 
ஒரு கல் - ஓரு கண்ணாடி போல்
அல்லது நம்மைப் போல்….

கண்ணாடி நிலைத்து நிற்க 
கல் தான் கைளினால் பற்றியெடுக்கப்படுகின்றது…….
இடம்பெயர்க்கப்படுகின்றது…..
வீசப்படுகின்றது………. – ஆனால்
சில்லுச்சில்லாக சிதறடிப்பதென்னவோ 
கண்ணாடியைத்தான்…. 

நான்
மௌனமாக கடந்தாலும் - நீ
வார்த்தைகளால் - என்னை 
காயப்படுத்துவது போல….. – 
அடுத்தவரிடம் விட்டுக்கொடுப்பது போல - அல்லது
காரணமின்றி மனதை உடைப்பது போல….

நீ தான் என்னை 
உடைத்துவிடுகின்ற அந்த கல்லா
அல்லது என்னை நோக்கி
வீசிய கையா – என 
உணருமுன்னே 
சில்லுச்சில்லாகி விடுகின்றேன் நான்!

இனிமேலாவது 
(ஒரு) கல் - கண்ணாடி பற்றி
பேசுவபர்கள்….
கவிதையியற்றுபவர்கள்….
கதையெழுதுபவர்கள்
பேசிக்கொள்ளட்டும் - குறைந்தபட்சம்
நொறுங்கி போய்விட்ட 
கண்ணாடியின் சிதறல்களை பற்றி!
கல் - கண்ணாடி 
உடையாமல் மோதிக்கொள்வதில்லை 
என்பது பற்றி…. – அல்லது 
வேண்டுமானால் வேகக்குறைவினால்
உடையாமல்…. –  ஏற்படுத்தி விடுகின்ற
சிறு விரிசலை  பற்றி….! 

(14.08.2025) 


Friday, August 8, 2025

காதலித்து விடுங்கள்..............

 
யாரையாவது ஒருவரை
அல்லது ஒன்றினை 
வலிக்க வலிக்க காதலித்து விடுங்கள் - அது போதும் 
இந்த குறுகிய வாழ்விற்கு... 

அழகு என்கின்ற எடை போடல்
அறிவென்ற மயக்கம்
பணம் மீதான பேராசை
பதவி மீதான மோகம் 
கண்டதுமான ஈர்ப்பு 
காதலித்தே ஆகவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் 
கட்டமைப்புக்கள்
கடமைகள்
தெரிவுகள் 
உடல்பசி

இதில் எதுவும் வேண்டாம்.
இதில் வந்தது எதுவும் வேண்டாம்......  

 யாரோ ஒருவரை - அல்லது
ஏதாவது ஒன்றை
உயிர் அறுக்க.... 
உள்ளம் வலிக்க.....
மனம் கொதிக்க....
உடல் பொங்க.....
கண்ணில் நீர் கோர்த்தப்படி....
திகட்ட திகட்ட.....
போதும் என்று சொல்லும் அளவுக்கு...... 

எந்தவித சுயநலமும் இல்லாமல்...
நீயில்லை என்று தெரிந்த மறுநிமிடமே 
நானுமில்லை என்று உணர்வால் சொல்வது போல..... 
 தொலைந்து போய்...
கரைந்து
 உருகி
வெந்து தணிந்து.....
மிதப்பது போல   
யாரையாவது ஒருவரை
அல்லது ஒன்றினை 
வலிக்க வலிக்க காதலித்து விடுங்கள் - அது போதும் 
இந்த குறுகிய வாழ்விற்கு... 
அல்லது வாழ்வதற்கு.....!



 

 

அதிகம் வாசிக்கபட்டவை