புரிதலும் பிரிதலும்

எனது இறுதிப்பதிவில் சந்தேகம் எனும் நோய் என்ற தலைப்பில் சில உளவியல் தொடர்பான விடயங்களை கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியானதான மேலும் சிலதை இன்று பகிர விரும்புகின்றேன். நான் அந்தப் பதிவினை பதிந்த வேளை சந்தேகத்தினால் ஊசலாடிக் கொண்டிருந்த என் பல்கலைக்கழக நண்பன் - நண்பியின் காதலினையும் அவர்களிடையான பிரிவிற்கான சில விடயங்களையும் கருத்தில் கொண்டு முன்வைத்திருந்தேன்.

உண்மையில் பல்கலைக்கழக காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டிருக்கும். பரீட்சைகள் , விரிவுரையாளர்களின் அறுவைகள் , ஆய்வுகூடத்தில் நடத்தும் கூத்துக்கள் என பல சுவாரஸ்யங்களுடன் பல நல்ல நண்பர்கள் சில வேளை அந்த நட்புகளே காதலாகி கனிவது முதல் பல இனியவைகள் என்றும் மறக்கமுடியாதவை. 
எங்களது பொறியியல் பிரிவிலும் ஒரு குழாம்; இருக்கின்றது. மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக மொத்தம் ஆறு பேர். அதில் ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று விட மீதியாக நாங்கள் ஐந்து பேர். எங்கள் குழுவிலும் ஒரு காதல் சோடி இருந்தது…( இங்கு இறந்தகாலத்தினை பாவிப்பதற்கு காரணம் அவர்கள் காதல் கடந்த கிழமையுடன் இறந்து விட்டது) நாங்கள் ஐவருமே சமூகத்தில் பொறுப்பான பதவி வகிப்பபவர்கள். எங்கள் இலட்சியங்களுக்காக மட்டுமே பொறியியலினை தெரிவு செய்துள்ளவர்கள். அனைவரும் கட்டடப்பொறியியல் தான் பயில்கின்றோம். பொறியில் என்றாலே பெரிய சுமை அதிலும் கட்டடப்பொறியியல் கேட்கவே வேண்டாம். கூடவே எங்கள் பணிகளும் எம்மை அழுத்துவதால் சில வேளைகளில் ( 24 வயதில் இது பெரியதொரு தியாகம்) கடலை போட கூட நேரம் கிடைப்பதில்லை. எம் குழுவில் நானும் இன்னொருவரும் கொஞ்சம் அமைதியானவர்கள் மற்ற நண்பன் கொஞ்சம் கலகலப்பானவர். அவரும் இன்னொரு நண்பியும் தான் காதலித்துக்கொண்டிருந்தார்கள். சிறு சிறு சந்தேகங்களினால் இன்று பிரிந்தும் விட்டார்கள். என்னவில் என் நண்பனைப் பிரிந்தது என் நண்பியின் துரதிஷ்டம் என்று தான் கூறுவேன். நான் கூட அவருடைய புரிந்துணர்வு, சிறு விடயங்களில் கூட காட்டும் அக்கறைகள், எவ்வளவு வேலைப்பளு இருப்பினும் அவளுடன் கதைக்காது இருப்பதில்லை போன்ற விடயங்களைப் பார்த்தும் பொறாமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அக்கறையான, பாதுகாப்பான ,புரிந்துணர்வுடைய காதலை இன்று பார்ப்பது மிகமிக அரிது. ஏன் இவருடைய முகநூல் பாஸ்வேட்டை கூட தன் காதலிக்கு கொடுக்கின்றளவு நேர்மையான ஒருவர்.

நான் முன்னரே கூறியது போல் இரவு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பினால் வந்த சந்தேகம், அவனின் நண்பியினுடனான உறவில் ஏற்பட்ட சந்தேகம் என்பன இன்று விரிசலாகவே மாறிவிட்டது. இங்கு பார்வையில் தான் பிழை இருந்ததே தவிர என் நண்பனில் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று இரு துருவங்களாகிவிட்ட இவர்களின் காதலை கனக்கும் மனதுடன் வேடிக்கை பார்க்கத்தான் எம்மால் முடிகிறது.
ஆனால் இதிலும் கூட பல பாடங்கள் உண்டு. ஒருவரை தெரியும் முன் யோசிக்க வேண்டும். நாம் கலகலப்பான பல ஆண் பெண்களுடன் பழகுபவர்களாயின் நம்மைப் புரிந்துகொள்பவர்களாக தெரிவுசெய்ய வேண்டும். நல்ல நட்புகளைக் கூட வேறு அர்த்தம் கொள்பவர்கள் நமக்கும் நமது தொழிலுக்கும் பொருத்தமற்றவர்களாயின் ஆரம்பத்திலேயே விலகிவிட வேண்டும்.

பழகிய பின் பிழை பிடித்து அடுத்தவர்களுக்கு வலிகொடுத்து விலகுவதை விட பழகும் முன்பே புரிந்துகொண்டு பழகுவது நல்லது

(யாரை முன்வைத்து எழுதினேனோ அவர்கள் என் எழுத்தினை வாசித்தும் இருவரையும் என் எழுத்து கூட சுடவில்லை என்பதும், நன்றாக புரிந்துகொண்டு உண்மையாக நேர்மையாக நடப்பவர்களுக்கு காதல் வாழ்க்கை அமைவதில்லை பலமுகங்களுடன் பலருடன் பழகுபவர்களது காதல் தான் கடைசி வரை நிலைக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. கடவுளை ஒரு வேளை கண்டால் அவனிடமும் இதற்கான காரணத்தினை நான் கேட்க வேண்டும்)

Comments

  1. காதல் என்பது அரிப்பு (சொறி மாதிரி) சொறிய சொறிய நன்னாயிருக்கும் அப்புறன் பார்த்தா திட்டு திட்டா வீங்கியிருக்கும் இது நான் சொல்லல சந்தானம் சொன்னது

    காதல் வாழ்க்கை அமையுதோ இல்லை காதலுக்கு வாழ்க்கை அமையுதோ இல்ல மேட்டரு
    காதல் இல்லாத வாழ்க்கை இருக்கு பார் அது கௌரவமானது.குறைந்தபட்சம் உன் சுய கௌரவத்தையாவது காப்பாற்றிக்கொள்ளலாம்

    தங்கையே முகப்புத்தகம் பாஸ் வேர்டை தருகிறோமா .....? அங்க தான் எங்க வெற்றியும் உங்க வீக்னசும்
    இப்படியே நம்பவச்சு கடைசியில அறுப்பம் பாரு கழுத்த அட அட அட அந்த சுகம் சொன்னாபுரியாது அனுபவிச்சா தான் புரியும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)