நீண்ட வேலைப்பளு நிறைந்த நாட்களின் பின்னர் திரைப்படம் பார்ப்பதற்கு இன்றைய நாளை திட்டமிட்டு ஒதுக்கியிருந்தேன். இதற்காக இரு படங்களையும் மனதினுள் நினைத்திருந்தேன். ஒன்று 12 வருடங்களுக்கு முன் வெளிவந்தது மற்றது அண்மையில் வெளிவந்தது.
சில திரைப்படங்கள் எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுப்பதில்லை. அல்லது ஏதோவொரு வகையில் நமக்கும் அந்த திரைப்பட பாத்திரங்களுக்குமிடையில் இருக்கின்ற உணர்வுநிலை தொடர்பு திரும்பத்திரும் பார்க்கத் தூண்டுவதுண்டு. அப்படி ஐந்தாவது தடவையாக நான் பார்க்கின்ற திரைப்படம் Queen ஹிந்தித்திரைப்படம். இன்னும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் ஆங்கில உபதலைப்புகளுடன் இணையத்தில் உள்ளது. 20014 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பஹ்ல் , இசை அமித் திரிவேதி. மொத்தமே மூன்று பாடல்கள். கதையும் பொருந்துகின்ற பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகளும் இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பிளஸ். கங்கணா ரணாவத் இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரமான ராணி மெஹ்ரா இல் நடித்துள்ளார். இதை விட வாழ்ந்துள்ளார் என்பது மிகப்பொருத்தமானது.
ராணியின் திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்வில் தான் திரைப்படம் ஆரம்பமாகின்றது. கலகலப்பான சூழ்நிலையில் ஆரம்பித்தாலும் அடுத்த சில நிமிடங்களில் ராணிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட விஜயின் அழைப்பின் பெயரில் அவரைச்சந்திக்கும் ராணியிடம் திருமணத்தினை நிறுத்தும் படி விஜய் கோரிக்கை விடுப்பதுடன் ஆரம்பித்த கலகலப்பு சூழல் மாறிவிடுகின்றது. சரியான காரணமின்றி தடுமாற்றத்துடன் விஜயினால் திருமணம் நிறுத்தப்படுவதுடன் முன்கதைச்சுருக்கத்துடன் தொடர்கின்றது கதை. ராணி- விஜய் இருவரது தந்தையர்களும் நண்பர்கள். ராணியின் குடும்பத்தினரால் நடாத்தப்படுகின்ற கடைக்கு வருகின்ற விஜய் ராணியை முதல் பார்வையில் பிடித்துப்போய் பின்தொடர ஆரம்பிக்கின்றார். ஹோம்சயன்ஸ் படிக்கின்ற ராணியை தொடர்ந்தும் வற்புறுத்தி காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதன் பின்னர் விஜய் படிப்பதற்கு வெளிநாடு சென்று விடுகின்றார். அவர் நாடு திரும்பும் போது ஏற்கனவே இரு குடும்பத்தினரும் பேசியற்கமைய திருமணத்திற்கான ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன. இதன் போது தான் வலுவான காரணமின்றி திருமணம் விஜயினால் நிறுத்தப்பட்டு விடுகின்றது. திருமணம் நிறுத்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்கின்ற ராணி ஏற்கனவே திருமணத்தின் பின்னர் தேனிலவிற்காக செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பாரிஸ்ற்கு தனியாக பயணப்படுகின்றாள். அங்கு பல்வேறுப்பட்ட நபர்கள், நண்பர்கள் என புதியதொரு சூழலிற்குள் காலச்சூழலில் இழுத்துசெல்லப்படுகின்றாள்.
தனியாக கனத்த மனதுடன் பயணிக்கின்ற ராணியின் செயற்பாடுகள், உடையமைப்பு , சிந்தனைகள் எல்லாம் மாற்றமடைகின்றது. இதனை அவதானிக்கின்ற விஜய் மீண்டும் தன்னுடனான உறவுநிலையை புதுப்பித்துக்கொள்ள முற்படுவதும் அதற்கு ராணியின் பதில் எவ்வாறமைகின்றது என்பதும் மீதிக்கதை. இத்திரைப்படம் வெளிவந்த காலப்பகுதியில் பல்வேறுப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பெண்கள் தம்முடைய சூழலிலிருந்து மீண்டெழுவதற்கான உத்வேகம் தருகின்றதொரு திரைப்படமாகவும் இது பேசப்பட்டது. அனாவசிய கதாபாத்திரங்கள் இல்லை. அனாவசியமான காட்சியமைப்புக்கள், கதை வசனங்கள் இல்லை.
“ஒரு பெண் காதல் அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் இருந்து விலகும் போது தன்னுடைய சுயகௌரவத்தினை, சுயமரியாதையினை எவ்வாறு மீட்டெடுக்கலாம் அல்லது இத்தகையதொரு உடைவிலிருந்து மீண்டெலலாம் என்பதையும், இத்தகைய உடைவுகள் ஒரு பெண்ணுக்கு நிகழும் போது சமூக கண்ணோட்டம் எவ்வாறிருக்கின்றது" என்பதையும் மிகவும் அழகாக பேசுகின்றது இத்திரைப்படம்.”
அடுத்த திரைப்படம் கடந்த 7 ஆம் திகதி வெளிவந்த “The Girl Friend”. இதற்கான எழுத்து - இயக்கம் ரகுல் ரவீந்திரன். இசையமைப்பு ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் பிரசாந் விகாரி. “நீயே… நீயே ஒளி…” பாடல் அருமை. ஒளிப்பதிவு கிரிஷ்ணன் மற்றும் சோட்டா. காட்சியமைப்புக்கள் அருமை. இத்திரைக்கதையின் முக்கிய பாத்திரமான பூமா(தேவி) பாத்திரத்தினை ரஷ்மிக்கா நடிப்பாளுகை செய்திருந்தார்.
தாயின்றி தந்தையிடம் வளருகின்ற பூமா பட்டப்பின் படிப்பிற்காக பல்கலைக்கழகத்திற்கு வருகின்றார். இரவில் நண்பியுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஏற்படுகின்ற விபத்தின் போது தன்னுடைய பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற விக்கியை சந்திக்கின்றார். “தன்னுடைய தாய்” போன்று பூமா இருப்பதாக நினைக்கின்ற விக்கி பூமாவைத் தொடர்ச்சியாக வற்புறுத்தி காதலிக்க ஆரம்பிக்கின்றார்கள். தன்னுடைய அறையினை துப்பரவு செய்வது முதல் தனக்கு உணவை ஊட்டிவிடுவது வரை பூமாவை தன்வசப்படுத்திக்கொள்கின்றார் விக்கி. அதேவேளை விக்கியை துர்க்கா எனும் பெண்ணும் விரும்புகின்றாள். தானே வலிய வந்து விக்கியிடம் தன்னுடைய விருப்பங்களையும் சொல்கின்றாள். ஆனால் விக்கி துர்க்காவை நிராகரித்து விடுகின்றான். இரு வருடங்களாக தொடர்கின்ற இவர்களது காதல் பூமாவின் தந்தைக்கு தெரிய வருகின்றது. இதனால் விக்கிக்கும் அவருக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடும் இதன் நீட்சியாக பல்கலைக்கழகத்தினை விட்டு வரும்படி தன்னுடைய மகளை எச்சரிக்கின்றார். இதற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டவுடன் அவசரமாக திருணத்தினை நடத்துவதற்கு விக்கி முயல்கின்றான்.
இருவருக்குமிடையில் தவிக்கின்ற பூமா தன்னுடைய படிப்பை முடிப்பதற்கும் இதற்கு தடையாகவுள்ள காதலை விட்டுவிடுவதற்கும் தயாராகி அதனை விக்கியிடம் சொல்கின்றாள். இதனால் தன்னுடைய ஈகோ அடிபட்டுவிட்டதால் எப்படி விக்கி பூமாவை அவதூறு செய்து பழிவாங்குகின்றான் என்பதும் அதற்கு பூமாவின் பதிலடி என்ன என்பதும் மீதிக்கதை.
ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கவும் திருமணத்திற்கு தெரிவு செய்வதற்கும் பின்னாலுள்ள ஆணாதிக்க அரசியலை நுண்ணியமாக பேசுகின்றது இத்திரைப்படம். அதிலும் விக்கி தன்னுடைய தாயை தன் காதலியான பூமாக்கு அறிமுகம் செய்கின்ற காட்சி அலாதியானது. இன்னும் இப்படியான பெண்கள் நம்முடைய வீடுகளில் அடுப்படியைத் துடைத்துக்கொண்டுதானிருக்கின்றார்கள் என்பது கசப்பானதொரு உண்மை தான்.
இதில் விக்கி பூமாவை காதலிப்பதை அறிந்து பூமா மீது எரிச்சல்படுகின்ற துர்க்காவும் பூமாவும் நண்பர்களாக மாறுகின்றதொரு தருணம் அழகாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான நடிகை என வர்ணிக்கப்படும் ரஷ்மிக்கா இத்திரைப்படத்தின் பூமா பாத்திரத்தில் தன்னுடைய இன்னுமொரு பரிமாணத்தினை வெளிக்காட்டுகின்றார். இதில் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் கூட அர்த்தங்களுடன் தான் கொடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. அதுவொரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இத்திரைப்படத்தினை பார்க்கும் போது என்னுடைய பல்கலைக்கழக நாட்கள் ஞாபத்திற்கு வந்துபோனது. இதில் சித்தரிக்கப்பட்டுள்ளதை போன்று எப்போதும் அப்பாவியான, புத்திசாலியான பெண்களை அதிக ஆண்கள் துரத்தி திரிவதற்கும் வலுக்கட்டாயப்படுத்தி காதலிக்கவோ அல்லது திருமணத்திற்கு நிச்சயிக்கவோ முயல்கின்றதன் பின்னான ஆண் அரசியலை நானும் மீட்டிப்பார்க்கின்றேன். பல்கலைக்கழக நாட்களில் விடுதியில் தங்கியிருந்த போது முகநூல் பாஸ்வேட் கேட்டு விடுதியில் இருந்ததொரு அக்காவை அடித்த அந்த ஆணை நினைத்துப்பார்க்கின்றேன். தம்முடைய காதலை சொல்லும் போது நீ என்னுடைய அம்மா மாதிரியிருக்கின்றாய் என்று சொன்ன ஆண்களை நினைத்துப்;பார்க்கின்றேன். பரதநாட்டிய அரகேற்றத்தில் பார்த்த மாத்திரத்திலேயே அந்தப்பெண்ணை விரும்பி “நீ பல ஆண்களுக்கு ஒற்றைப்பெண், வீட்டை நன்றாக பார்த்துக்கொள்வாய், மென்மையாய் இருப்பாய்” என்று நிச்சயம் செய்துகொண்ட ஆணை கடந்திருக்கின்றேன். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணானவள் பொறியியலாளர் என்றால் அது தொடர்பில் மட்டும் பணியாற்றினால் போதும் திரைப்படத்துறை எதற்கு? விவசாயம் எதற்கு? ஓவியம் எதற்கு? என்று தினமும் காயப்படுத்துகின்றதொரு ஆணுடன் பயணித்திருக்கின்றேன். சம்பந்தமேயில்லாமல் பொதுவெளியில் ஒரு பெண்ணை மட்டந்தட்டி, அடுத்தவர்களிடம் “என்னிடம் விருப்பம் கேட்டு நான் இல்லை என்று சொன்னேன்” என இன்னொரு பெண்ணிடம் நள்ளிரவில் அந்தப்பெண்ணை பற்றி முதுகுப்பின் பேசுகின்ற ஒருவரால் உடைந்திருக்கின்றேன்.
இறுதியாக மேடையில் நின்று பூமா பேசும் போது “எனக்கென்று ஒருவன் கிடைப்பான்டா, உன்னை மாதிரியில்ல ரொம்ப முதிர்ச்சியானவனா, டீசன்ட்டானவனா ஒருவன் கிடைப்பான்டா…..” என்று உரத்த குரலில் சொல்கின்ற வரிகள் மேற்சொன்னா அனைத்து Toxic ஆண்களுக்குமானது.
The Girl friend பெண்கள் பார்க்கவேண்டியதல்ல ஒவ்வொரு வயது வந்த ஆணும் பார்க்க வேண்டிய படம்.
சூப்பர் 👍
ReplyDeleteThank You
ReplyDelete