Friday, September 14, 2012

படித்ததில் பிடித்தது (01) - ‘துன்பத்தின் பூக்கள்’ (Fleurs du mal) – Chrles Baudelaire




சார்ல்ஸ் போதலயரின் “துன்பத்தின் பூக்கள்” கவிதைத் தொகுப்பில் நான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த சில வரிகள்...
“அந்நியன்” என்ற இந்த வசன கவிதையில்,

 
சொல் மர்ம மனிதனே நீ யாரை அதிகம் விரும்புகிறாய் ?
தாயை? தந்தையை? சகோதரியை ? சகோதரனை ?
- எனக்குத் தாயுமில்லை, தந்தையுமில்லை, சகொதரியுமில்லை, சகோதரனுமில்லை.
- உனது நண்பர்கள்?
- இதுவரையும் நான் அர்த்தம் அறியாத ஒரு சொல்லை உபயோகித்தல்லவா நீங்கள் பேசுகிறீர்கள்.
- உனது தேசம்?
- அது இவ்வுலகில் எங்கிருக்கிறதென அறியேன்.
- அழகு ?
- ஓ அதுவா ,தேவதையானதும் அழிவற்றதுமான அதில் வேண்டுமானால் நான் விருப்புறுவேன்.
 - தங்கம் ?
- நீங்கள் கடவுளை வெறுப்பதுபோல், நான் அதை வெறுக்கிறேன்.
 - அப்படியானால், அசாதாரண அந்நியனே, நீ எதைத்தான் விரும்புகிறாய் ?
 - நான் மேகங்களை விரும்புகிறேன். அதோ அங்கே.. இங்கேயெல்லாம்… தாண்டிச் செல்லும் மேகங்களை, அற்புதமான அந்த மேகங்களை நான்விரும்புகிறேன்.
—–

எதிரி” என்ற தலைப்புடனான கவிதையில்
– ஓ ! உளஉபாதையே, உளஉபாதையே, காலம் வாழ்வை உண்கிறதே.
புலப்படாத எதிரியான எம் இதயத்தை அரிக்கும்(அபத்தங்களிலாலுருவாகும்) சலிப்போ
நாம் இழக்கும் உதிரத்தை அருந்தி கொழுத்தப் பருக்கிறதே.

“மனச்சோர்வு” என்ற கவிதையில் வரும்

நீள் சலிப்பிற் கிரையாகி முனகும் மனதில் மூடியைப்போல்
பாரமுற்றுப் பதிந்த மேகம் சுமையாகும் போது,
சுற்றிய வட்ட அடிவானம் எங்கிருந்தும் அது
எம்மில் இரவினும் இருண்ட பகலை வார்க்கும் போது,

பூஞ்சணம் பீடித்த மேற்சுவர்களில் தலையை மோதி,
பறக்க மறுக்கும் இறக்கைகளால் சுவர்களைத் தட்டி,
வெளவால் ஒன்றைப்போல் நல்லெதிர்பார்ப்பு விட்டுச் செல்லும்
ஈரநிலவறையாய் இவ்வுலகம் மாறிவிட்ட போது,



பரந்த தன் சுவடுகளை விரவும் மழைக்கதிர்கள் பூமியெனும்
மிக அகன்ற சிறைச்சாலைக் கம்பிகளாய்த் தோற்றமுறும் போது,
நம் மூளைகளின் ஆழத்தில் அருவருக்கும் ஊமைப்
புலிநகச் சிலந்திகளின் கூட்டம் வலைவிரிக்கும்போது,



தேசமின்றியவையும் அலைபவையுமான ஆத்மாக்கள்
பிடிவாதமாய்ச் சிணுங்கி அழுவதுபோல்,
ஆவேசமாய்த் திடீரென (ஆலய) மணிகள் அடித்து
ஆகாயத்தை நோக்கித் தாங்கொணாது அலறுகின்றன.

இசையின்றிப் பறையுமின்றி நீள் பாடைகள் என் உயிருக்குள் மெதுவாய்ஊர்வலம் போகின்றன. தோற்கடிக்கப்பட்ட எதிர்பார்ப்பு அழுகின்றது.கொடூரம் நிறைந்த இனந்தெரியாப்பய உணர்வு தன் கருங்கொடியை
என் சாய்ந்த மண்டையோட்டில் சர்வாதிகாரமாய் நாட்டுகிறது
 சிறுவயதிலிருந்து பலவித துன்பங்களையும் அனுபவித்து வந்த இக் கவிஞனின் வரிகளில் மறக்கமுடியாதவை பல அவற்றுள் இவை சில... ஒருவரின் கவிதைகளில் தெரிகின்ற வலியும் வேதனையும் அசலானவைகள் அதில் எவ்வித பாசாங்குகளும் இருப்பதில்லை... இதில் கவிஞர் வலிந்து எழுதாமல் வலிகளை வடித்துள்ளமையை காணலாம்.






No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை