Tuesday, July 23, 2013

41 வது இலக்கிய சந்திப்பில்........ எனது உரை

கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்கள்

நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் கேள்விக்குட்படுத்தக்கூடிய ஒரு விடயம் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

1978 இன் 4 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழச் சட்டத்தமின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இச்சட்டம் 1948 செப்டெம்பர் 8 ஆம் திகதி முதன்முதலாக சட்டமாக்கப்பட்டது. பின்னர் 1950, 1953,1955,1981 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது.

  • மேற்படி ஆணைக்குழு பரிசீலனை செய்ய வேண்டுமென ஜனாதிபதியவர்கள் நியமித்த விடயங்கள் வருமாறு2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி அமுலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வி அடைவதற்கான காரணங்கள் மற்றும் 2009 மே 19 வரை இடம்பெற்ற சம்பங்களுக்கான காரணங்கள்
  • யாராவது தனிநபர் , குழுவினர் அல்லது நிறுவனம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இது தொடர்பான பொறுப்புக்களை ஏற்கின்றார்களா?
  • இத்தகைய சம்பவங்கள் மீள ஏற்படாத வகையில் அதனை உறுதிப்படுத்தக் கூடிய மேற்படி சம்பவங்களிலிருந்து நாம் கற்க வேண்டியள பாடங்கள்
  • இச்சம்பவங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு நபரோ அல்லது அவர்களில் தங்கி வாழ்பவர்களோ அல்லது அவர்களின் பிறப்புரிமை கொண்டோரோ நல்லிணக்கம் செய்யப்படக்கூடிய வழிகள்
  • இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்கக்கூடிய வகையிலும் சகல சமூகங்களுக்கிடையில் தொடர்ந்தும் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளக்கூடிய நிர்வாக ரீதியிலான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றுமு; புலனாய்வு செய்யப்பட்ட விடயங்களில் ஏதேனும் ஓர் விடயத்திற்கு ஏற்புடைய வேறு பரிந்துரைகளை செய்தல். ஆகிய ஐந்து விடயங்களே அவை….
இந்த ஆணைக்குழு 2010 ஆகஸ்ட் 11 ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்தது. கொழும்பிலுள்ள “சர்வதேச ரிதியான உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கை நெறிகள் பற்றிய லக்ஷ்மன் கதிர்காமர்” செயலகத்தில் விசாரணைகளை மேற்கொண்டது. யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி ,முல்லைத்தீவு, மட்டக்களப்பு, புத்தளம், மன்னார், வெலிஓய, காலி, மாத்தறை, கண்டி, அம்பாறை ஆகிய இடங்களில் பகிரங்க விசாரணைகள் இடம்பெற்றன.
இவ்விசாரணைகளின் போது பொதுமக்கள் பலர் பங்கு பற்றியதுடன் அழைப்பாணை மூலம் சாட்சிக்காரர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

  •  2010 செப்டெம்பர் மாதம் இடைக்கால பரிந்துரைகள் உள்ளடக்கிய அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
  • பின்னர் 2011 நவம்பர் மாதம் ஆணைக்குழுவின் இறுதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
  •  2011 டிசம்பர் 17 ஆம் திகதி சபை முதல்வர் திரு.நிமல் சிரிபால டி சில்வா இவ்வறிக்கையை சபா பீடத்தில் சமர்ப்பித்தார்.
  • 2012 பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை ஜெனீவாவில் நடைபெற்ற 19 ஆவது அமர்வில் ஐக்கிய அமெரிக்கா இலங்கை பற்றிய தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்தது. டுடுசுஊ ஆணைக்குழுவினை அமுல்படுத்துமாறும் கோரப்பட்டது.
  • 2010 முதல் 2011 நவம்பர் வரை சாட்சிகளை விசாரணை செய்து ஆணைக்குழு அறிக்கையுடன் 285 பரிந்துரைகளை முன்வைத்தது.

இப்பரிந்துரைகளில்
  • சிவிலியன்களின் பாதுகாப்பு
  • சட்டவிரோத ஆயுதக்குழுக்களை தடைசெய்தல்
  • காணாமற்போதல் .கடத்தப்படுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்தல்
  • முறையான விசாரணைகளை மேற்கொண்டு சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்டவர்களுக்கான சட்டதீர்வுகளை மேற்கொள்ளுதல் 
  • வடக்கு கிழக்கு மாகாணங்களின் இராணுவ மயப்படுத்தலை நீக்கி காணிப்பிணக்குகளை தீர்த்தல்
  • கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் தகவல்களை பெறும் சுதந்திரத்தையும் உறுதிசெய்தல். 
  • பெண்கள், சிறுவர்கள் விசேட தேவையுள்ளோருக்கான பாதுகாப்பு
  • பாதிக்கப்பட்டோருக்கான நஷ்டஈடு
  • தேசிய இனங்களுக்கிடையில் நட்புறவையும் நல்லிணக்கத்தினையும் மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள்
  • 13வது திருத்தச்சட்டத்தை அமுலாக்கி அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை உருவாக்கி அரசியல் தீர்வொன்றை எட்டுதல்
  • மும்மொழிக்கொள்கை அமுலாக்கம்
  • மோதல் பிரதேசங்களுக்கு அண்மையில் வாழும் சிங்கள முஸ்லீம் மற்றும் மலையக தமிழர்கள் உட்பட சகல மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
  • புலம் பெயர்ந்தோருக்கான தேசிய ஐக்கியத்திற்கான ஒத்துழைப்புக்களை அமுலாக்கல்

போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய விடயங்களில் "பெண்கள் பற்றியதான பரிந்துரைகள்" தொடர்பில் பேசுவதே என் உரையின் கருப்பொருள்





285 பரிந்துரைகளில்...............
  1. 9.86 -அரசாங்கத்தகவல் மூலங்களின் படி 59,000 இற்கும் அதிகமான பெண்கள் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களின; நல்வாழ்வினை உறுதிப்படுத்துவதும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிக முக்கியமாகும்.
  2. 9.87 - அநேகமான பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர். அல்லது அவர்கள் இருக்கும் இடம் தெரியாதிருக்கின்றனர். சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மன வேதனைகள் இருக்கத்தக்கதாக மேற்படி குடும்பங்களின் சிறுவர்களையும் முதியோர்களையும் பராமரிக்கவேண்டியது இப்பெண்களின் பொறுப்பாகும். எனவே அவர்களுக்கான ஒரு ஜீவனோபாய மார்க்கத்தையும் வருமானம் ஈட்டித் தரும் முறையையும் அமுல்படுத்த வேண்டும்.
  3. 9.88 - இந்தப் பணியில் உதவியளிப்பதற்கு சர்வதேச சமூகங்களும் சர்வதேச ஸ்தாபனங்களும் சிவில் அமைப்புக்களும் தமது அறிவையும் வழங்கலையும் வழங்கும் வகையில் அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும். உள்@ராட்சி நிறுவனங்கள், அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என்போர் பாதிக்கப்பட்டோரின் மனநலம் கருதி நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  4. 9.89 - மோதலின் நீடித்த யுத்தம் காரணமாகவும் குடும்பத்தின் ஆண்களை இழந்த காரணத்தினாலும் கல்வி தொடர முடியாது பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு முறைசார் அல்லது முறைசாரா கல்வி வசதிகளை ஏற்படுத்தியும் தொழில்பயிற்சி அல்லது வாழ்வாதார முறை என்பவற்றை தயாரிக்கவும் உதவ வேண்டும்.
  5. 9.90 - இப்பெண்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையிலும் தமது மனித கௌரவம் பாதுகாக்கக் கூடிய வகையிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்திற்கான முன் நிபந்தனையாக இத்தகைய சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஆணைக்குழு கருதுகிறது.
  6. 9.91 - காணாமற் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், எதேச்சதிகாரமாக நீண்டகாலம் தடுத்து வைத்தல், காணாமற் போகச் செய்தல் என்பன பெண்களை நேரடியாகப் பாதிக்கும் விடயங்களாகும். மேற்படி பாதிப்புக்கு உள்ளானவர் தமது கணவராகவோ தந்தையாகவோ மகன்மாராகவோ சகோதரர்களாகவோ இருக்கலாம். தமது அன்புக்குரியவர்கள் இருக்கும் இடம் அறியாவிட்டால் உண்மையையும் சட்ட ரீதியான பாதுகாப்பையும் பெறும் உரிமை அவர்களது ஜனநாயக உரிமையாகும். நல்லிணக்க முயற்சிக்கு இது முன் நிபந்தனையாகும்.  
  7. 9.92 - இப்பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைக் காண்பதாயின் நிறுவனங்களுக்கிடையிலான முயற்சிகளும் ஒருங்கிணைந்த முயற்சியினால் மட்டுமே அதை எதிர்கொள்ள முடியும் என ஆணைக்குழு கருதுகிறது. மேற்குறிப்பிட்ட பாதிப்புக்குள்ளான அனைவர் பற்றிய தீர்வுகளைக் காண்பதற்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் ஒரு செயலணி தாமதமின்றி ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும்.
ஆகிய 7 பரிந்துரைகள் மட்டும் விளிம்புப்பால் நிலையினரான பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பரிந்துரைகளில் 9.91 பரிந்துரைக்கமைய தனது கணவன் காணாமல் போனது தொடர்பான விடயம் குறித்து பெண்ணொருவரினால் அளிக்கப்பட்ட சாட்சியப்பகிர்வு பற்றியதொரு விடயத்தை உங்கள் முன்வைக்க விரும்புகின்றேன்.

சம்பவம் பற்றிய விளக்கம்

அரச படைகள் மற்றும் விடுதலைப்புலிகளிடையேயான கடந்தகால மோதல்கள் காரணமாக பொது மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் மீறப்பட்டிருக்கின்றன எனும் விடயம்  நாட்டின் பலபாகங்களிலும் இருந்து, ஜனாதிபதியினால் நியமிக்கப்ட்டிருந்த கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் பெருமளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதில் சரணடைதல் அல்லது கைது மூலம் அரசாங்க அதிகாரிகளால் கட்டுக்காவலுக்கு எடுக்கப்பட்ட நபர் ஒருவரின் பாதுகாப்பு மற்றும் பத்திரதன்மை என்பன அரசாங்கத்தின்  பொறுப்புக்கூறலாக இருக்க வேண்டும் என ஆணைக்குழு வலுவாக தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் நாட்டின் ஜனாதிபிதியினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் கடந்த 2011, ஜனவரி 8ம்,9ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது.இதன் போது மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் தமது சாட்சியங்களை பதிந்திருக்கின்றனர். இவற்றில் அதிகமானவையாக கடத்தல், காணாமல் போதல் மற்றும் சரணடைந்த நிலையில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் பதியப்பட்டிருந்தன.
மன்னார் மாவட்டத்தில் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் சாட்சியப்பதிவுகள் மடு உதவி அரசாங்க அதிபர் பணிமணையில் இடம்பெற்றிருந்தது இதன்போது பெரிய பண்டிவிரிச்சான் கத்தோலிக் தேவாலயத்தின் அப்போதைய அருட்தந்தையாக பணியாற்றிய முரளி உட்பட பலர் சாட்சியங்களை அளித்திருந்தனர். இதன் போது முல்லைத்தீவில், “அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் ஊடாக இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தளபதிகள் எங்கே?” என ஆணைக்குழு முன்னிலையில் ஜானின் மனைவி கேள்வி எழுப்பியிருந்தமை சி.ஆர்.டீ. சில்வா தலைமையிலான ஆணைக்குழுவினரையும், அங்கு குழுமியிருந்தவர்களின் புருவங்களையும் ஒரு கனம் மேல் எழுப்பியிருந்தது. 

மூன்று பிள்ளைகளின் தயாhரான மிலோனியா ராயப்பு (ஜான் மனைவி)  ஆணைக்குழு முன் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த  சாட்சியமானது:

“45 வயதான அந்தோனி ராயப்பு (ஜான்) என்ற தமது கணவர் தமிழீழ  விடுதலைப்புலிகளின்   மன்னார் மாவட்ட தளபதியாக ஜான் என்னும் பெயரில் கடமையாற்றி வந்ததாகவும் இவர் ஏனைய விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களுடன்  இராணுவத்தினரிடம் சரணடைந்திருக்கின்ற போதும் அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தொடர்பில் எது வித தகவல்களும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். மேலும்
தமது கணவன் உள்ளிட்ட விடுதலைப்பபுலிகளின் சிரேஸ்ட தலைவர்களான  வேலவன், ரூபன், இளம்பரிதி, பாபு, குமரன், மற்றும் கருவண்ணன் ஆகியோர் கத்தோலிக்க குருவான அருட்தந்தை  பிரான்சிஸ் ஜோசப் ஊடாக முல்லைத்தீவில் வைத்து படைத்தரப்பினரிடம் சரணடைந்ததாக அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். 

மிலோனியா ராயப்புவின சாட்சியத்தின் படி அருட்தந்தை உட்பட இவர்கள் அனைவரும் தம் முன்னிலையில் வைத்து பேரூந்து ஒன்றில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், எனினும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியாதிருக்கின்றது. எனவே அருட்தந்தையுடன் சேர்த்து அழைத்துச்செல்லப்பட்டவர்களது  நிலவரம் என்ன என்பதை வெளிப்படுத்துமாறு ஆணைக்குழு முன் மிலோனியா ராயப்பு கேட்டிருந்;தமை குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய விடயமாக அருட்தந்தையுடனான இந்த குழுவினர் பேருந்தில் ஏற்றப்பட்டு  அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் இந்த சம்பவம் 2009 ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை  8 மணி அளவில் இடம்பெற்றதாகவும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார். 

ஆணைக்குழுவின் முன்னிலையில் தொடர்ந்து சாட்சியமளித்த மிலோனியா ராயப்பு 16.05.2009 அன்று முள்ளிவாய்க்காலிலிருந்து முல்லைத்தீவுக்கு தனது மூன்று பிள்ளைகளுடன் தான் இடம்பெயர்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து  17.05.2009 ஆம் திகதி தனது கணவரும் தம்முடன் வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த சுற்று வட்டத்தில் தங்கியிருந்தவர்களிடம் ஒலி பெருக்கி மூலமாக விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களை சரணடையுமாறு கேட்டு கொண்டதற்கமையவே தமது கணவர் உட்பட சிரேஸ்ட தளபதிகள் சுமார் 40 பேரளவில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் ஊடாக இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றனர் எனவும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்திருந்தார்.

மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் குறித்த தினம் (09.01.2011) இடம் பெற்றிருந்த ஆணைக்குழுவின் சாட்சிய பதிவு நிகழ்வுகளின் போது மன்னார் மாவட் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், மடு உதவி அரசாங்க அதிபர், பத்திரிகையாளர்கள், அவதானிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 
 
இச்சம்பவம் தொடர்பாக மேற்குறிப்பிட்ட விசாரணைகள் இடம்பெற்று இன்று வரையில் எவ்வித தகவல்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரணடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவுக்காரர்களுக்கு அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பதையும் அவ்வாறு சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும் உரிமை இருக்கின்றது. என்பதையும் ஆணைக்குழு திடமாக தெவித்திருக்கின்றது. அதேவேளை இவற்றை செய்ய முடிந்தால் இப்பிரச்சிணைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனவும், நல்லிணக்கப்பாடு ஒரு நடை முறையாகும் என்றும் ஆணித்தரமாக தெரிவித்திருக்கின்றது.
நிலைமை இவ்வாரிருக்க, பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் கத்தோலிக் குருவானவர் ஊடாக சரனடைந்ததற்கு நேரில் கண்கண்ட சாட்சியங்கள் இருக்கத்தக்கதாக தமது கட்டுக்காவலுக்குள் எடுத்தவர்கள் எவ்வித தயக்கமுமின்றி அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும், அதிலும் குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் (கோத்தபாய ராஜபக்ஷ) ‘இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் எவரும் கானாமல் போகவில்லை’ என தெரிவித்திருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயம்

சரணடைந்தவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் பிரச்சினைகள் எந்தவொரு நல்லிணக்க நடவடிக்கையின் போதும் பாரதூரமான தடையாகும் எனவும் இத்தகைய சம்பவங்கள் பற்றி முன்னைய ஆணைக்குழுக்கள் பல தீர்வுகளை முன்வைத்த போதிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அவற்றை செயற்படுத்தாத காரணத்தினால் அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் ஒவ்வொன்றும் விமர்சனங்களுக்கும,; சந்தேகத்திற்கும் ஆளாகியுள்ளன. அதனால் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவும் இச்சந்தேகத்திலிருந்து மீள முடியாது. என்பதை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த குறித் ஆணைக்குழுவே வெளிப்படையாக தெரிவித்pருக்கின்றமை கோடிட்டு காட்டப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. இது தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையின் 9.91 தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது. 

LLRC யின் பெண்களுக்கான பரிந்துரைகளில் ஒன்றான 9.88 இல் “உள்ளுராட்சி நிறுவனங்கள், அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என்போர் பாதிக்கப்பட்டோரின் மனநலம் கருதி நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தளவில் இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகிறது. இவ்வாறு பாதிப்படைந்த பெண்களின் மன அழுத்தங்கள் பற்றியும் அது தொடர்பில் மந்த நிலையிலுள்ள நடவடிக்கைகள் குறித்துத் உளவியல் வைத்தியர். எஸ்.சிவதாஸ் இன் கருத்துக்கள்….




LLRC இன் சாட்சியமளிப்புகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான பயனுறுதிமிக்க நடவடிக்கைகள் இவ் ஆணைக்குழுவிற்கு இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பிற்கான உத்ரவாதம் வழங்கப்படாத நிலைமையே காணப்படுகிறது. இதற்கு சிறந்ததொரு உதாரணம் பாலியல் தொந்தரவுகள் மற்றும் சித்ரவதைகளுக்குட்பட்ட மட்டக்களப்பு பிரதேச பெண்ணொருவர் சாட்சியப்பதிவின் பின்னர் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

மேலும் பால்நிலை சம்மந்தமான சிக்கல்களைப் பற்றியதான விசாரணைகளில் பெண்களின் இயலாமையை மதிப்பீடு செய்வது தொடர்பில் ஆணைக்குழு தோல்வி கண்டுள்ளது. ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது பெண்களுக்கு பாரிய தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. அது மாத்திரமன்றி LLRC ஆணைக்குழு பெண்களின் சாட்சியப்பகிர்வுகளை பொறுத்தமட்டில் அவர்களுக்கு அகௌரவத்தினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சாட்சியமளிக்கும் நிகழ்வில் கூட பெண்கள் தம் உணர்வுகளை வெளிக்காட்ட முற்பட்டு கதறியழுத வேளை கண்டிக்கப்பட்டதுடன் இவர்களது சாட்சியங்களை எழுத்துமூலமானதாக சாட்சியமளிக்கும் படி கட்டளையிடப்பட்டமையும் மேற்கோள் காட்டப்படத்தக்கதான விடயங்களாகும்.

LLRC இன் பரிந்துரைகளான 9.92  இற்கமைய கணவன்மார் காணாமல் போய் அவர்களை இழந்து குடும்பத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ள பெண்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான நிவாரண வழங்கள் தொடர்பாகவும் எமது தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கபட்ட ஆவணப்படம் அடுத்து…..


 

இன்று ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி கொண்டிருக்கும் விளிம்புநிலை சமூக சக்திகளில் முக்கிய சக்தியான பெண்கள் காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக இலங்கைப் பெண்களின் உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசியல் எந்தளவிற்கான பங்கு வழங்கப்பட்டுள்ளது என்பதற்காகவே “LLRC பரிந்துரைகளில் பெண்கள்” என்ற விடயத்தினை ஆராய்ந்திருந்தேன்.
LLRC பரிந்துரைகளில் பெண்களுக்கான பரிந்துரைகளின் விகிதம் குறைவாகவே காணப்படுகிறது. 285 பரிந்துரைகளுள் 7 பரிந்துரைகளே பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 7 பரிந்துரைகளுள் மட்டுமே உள்ளடக்கப்பட்டு விட்ட பெண்களுக்கான உரிமைகளானது சரியானதும் சட்டரீதியானதுமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அன்றில் கற்றுக்கொண்ட பாடங்கள் கற்றது என்ற செயற்பாட்டுடன் மட்டுமே நின்று விடுவதுடன் சித்தியடையாத பாடங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்பதிலும் நல்லிணக்கம் என்பதும் தொலைபுள்ளியாகி விடும் என்பதிலும் ஐயமில்லை.

எந்தவொரு போரிலும் முதல் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண்: இரண்டாம் நிலையில் பாதிப்படைபவளும் பெண்!


முதல் பிரசவத்திற்கு காத்திருக்கும் தாயின் தவிப்புடன் காத்திருந்து உரைப் பிரசவத்தினை 41 வது இலக்கிய சந்திப்பில் நடத்தி விட்டதில் மிகவும் மகிழ்ச்சி. இதில் பங்குபற்றும் முன்னும் சரி பின்னரும் சரி இது தொடர்பிலான விமர்சனங்கள் வழமை போன்றே ஏராளம். “ போடவுள்ள முள்ளை பொறுக்கித் தின்னவுள்ள நாய்கள்” என்பதில் தொடங்கி “எமது எதிர்ப்பை காட்டவுள்ளதால் தயவுசெய்து பங்குபற்றாதீர்கள்” என்பது வரை பல ஏளனங்கள், அன்பு வேண்டுகோள்கள்.

நாணயத்தின் மறுபக்கமாக உங்கள் எதிர்ப்புகளில் சில நியாயங்கள், தார்மீகக் கோபங்கள் இருக்ககூடும். ஆனால் என்னளவில் கூறுவதாயின் எனக்குக் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக விளிப்புபால் நிலையினரது அரசியல் உரிமைகள் தொடர்பிலான விடயங்களை முன்வைத்து விட்டேன்.

 “எல்லோரும் வாய்ப்பினை பயன்படுத்துகின்றோம் என்று தான் கூறுகின்றீர்கள். ஆனால் என்ன தான் கிழித்து விட்டீர்கள்?” என நீங்கள் கேட்க நினைக்கலாம் அல்லது கிடைத்த தளத்தினை பயன்படுத்திவிட்டு அதை நியாயப்படுத்துகின்றேன் என்று நீங்கள் கூறலாம். பெரியளவில் எதையும் வெளிப்படையாக சாதிக்கவில்லை என்றாலும் நிகழ்வின் பின்னர் என்னுடன் கலந்தரையாடிய பலர் கூறிய, கேட்ட விடயங்கள் நிச்சயம் இப்பரிந்துரைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

போகமுன் எதிர்த்தவர்கள் நான் அரசாங்கத்தினை ஆதரிப்பதாகவும் என் உரையை கேட்டவர்கள் நான் அரசாங்கத்தின் மேல் பழி போட்டு விட்டதாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறியிருந்தனர். விமர்சனங்கள் அவரவர் பார்வையினைப் பொறுத்தது. எல்லோரையும் யாராலும் எப்போதும் திருப்திபடுத்திட முடியாது.

திருப்திபடுத்துவதை விட தீர்வுகள் முக்கியம். விமர்சனங்களை விடவும் விடிவுகள் முக்கியம். எது எவ்வாறாயினும் என்றும் ஓர் ஊடகவியலாளராக, பெண்ணியவாதியாக என் பணி தொடரும்.



 

1 comment:

  1. இலக்கியச்சந்திப்புத் தொடர்பாக நானும் சில விமர்சனஙகளை முன்வைத்திருந்தேன். அவ்விமர்சனங்கள்இலக்கியச்சந்திப்பு நடத்தப்படக் கூடாது என்பதற்காக அல்ல. அது கடந்தகாலத்தில் தான் தவறிச் சென்ற பாதையிிருந்து மீளத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே.
    எனது அபிப்பிராயங்கள அதில் கலந்து கொள்பவர்கள் பற்றியதாக இருக்கவில்லை.அதனை ஒழுங்கு செய்பவர்கள் தொடர்பானதே.

    என்னுடைய கருத்தை சுதந்திரமாக வைக்கக் கூடிய எந்த வெளியையும் பயன்படுத்தலாம் என நினைப்பவன் நான். அதனைத் தான் நீங்களும் செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். பாராட்டுகள். தொடருங்கள். - மாயவன்.

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை