Tuesday, July 9, 2013

அழகோ அழகு...

“ஒரு ஆணோட கம்பீரத்தினை அவன் கடின வேலை செய்யும் போதும் பெண்ணோட அழகை காணவேண்டுமாயின் காலையில் அவள் விழித்தவுடன் பார்க்க வேண்டும்” என்பார்கள். இவ்விரு சந்தர்ப்பங்களின் போதும் தான் இவர்களது சுயரூபத்தினை அறியலாம் என்பதால் தான் இவ்வாக்கியம் உருவாயிருக்க வேண்டும். நல்ல நேரம் இதை சொன்னவர் இப்போது இல்லை. இருந்திருந்தால் கணணியிலேயே இருக்கும் ஆண்களையும் இரவு படுக்கும் முன் பூசிய நைட் கிறீம் உடன் காலையில் எழுந்து வரும் பெண்களையும் பார்த்து ஏமாந்திருப்பார். (இரண்டாவது சிட்டுவேசன்ல பயந்தும் கத்தியிருப்பார்)

இது ஒரு பக்கமிருக்க நாம் பெண்களை அல்லது ஆண்களை சைட் அடிக்கும் போது பெண்ணாயின் உடற்கட்டமைப்புகளையும்….(இன்னும் இருக்கும் எனக்கு தெரியாதுங்க) ஆணாயின் அவனுடைய உயரம், சொட்டைத்தலையா?, நிறமென்ன? (நான் பெண்ணென்பதால் இது எனக்கு நல்லாவே தெரியும்) என்றெல்லாம் பார்ப்போம். இது பொதுவாக ஒருவரை பார்க்கும் போது எதிர்பாலினர் கவனிக்கும் விடயங்கள்.



ஆனால் பாருங்கோ பாரதி சொல்லியிருக்கான் பெண்ணுக்கு அழகு “வீரம்” தானாம். அதாவது ஒரு பெண்ணுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அளவு வீரம் இருக்க வேண்டும். உடனே பருவப் பெண்கள் விடலைகளைத் தாக்க காலின் செருப்புகளையும் மணமாகிய தாய்க்குலங்கள் அகப்பை, உலக்கை போன்றவற்றினையும் தூக்கிவிடாதீர்கள். அதற்காக துரத்துவர்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டும் இருக்காதீர்கள். அடுத்தவர்கள் குட்டும் போதும் குனியாதீர்கள்.






என் ஊடக அனுபவத்தில் பலவிதமான பெண்களை பார்த்திருக்கின்றேன். அவர்களை மூவகை படுத்தலாம்.
  1. பாரதியின் புதுமைப் பெண்கள்
  2. பெண்ணியம் பேசிக்கொண்டு சமையலறையை கூட எட்டிப் பார்க்காதவர்கள்  
  3. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்று வாழும் பெண்கள்.

இந்த மூன்றாம் வகை பெண்களுள் ஒருவரை அண்மையில் என் வாழ்வில் சந்தித்திருந்தேன். இந்த பெண்ணுடைய எழுத்துக்களை வாசித்தீர்கள் என்றால் ஏதோ கையில் துப்பாக்கியுடன் பிழை செய்யும் ஒவ்வொரு ஆணையும் என்கவுண்டர் செய்வது போல் “செருப்பால் அடிக்க வேண்டும் அந்த நாயை….” என்று எழுதவார். ஆனால் இவருடைய காதலன் பல பெண்களுடைய வாழ்வில் விளையாடுவது அறிந்து பாதிக்கப்பட்ட பெண் நியாயம் கேட்ட போது “நீங்கள் என் சகோதரி போல அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்….” என்று கூறியுள்ளார். ஆகமொத்தத்தில் அடுத்த வீட்டு ஆணின் கொலரை பிடிக்க தைரியமுண்டு நம் வாழ்வு என்று வரும் போது கேள்வி கேட்டால் தன் வாழ்வு கேள்விக்குறியாகி விடும் என்ற சுயநலம் தடுத்துவிடுகிறது. காதலன் என்றாலும் கணவனே என்றாலும் காமுகன் என்றால் அவனை களையெடுக்கத் தான் வேண்டும்.

இரண்டாம் வகையினர் இருக்கிறார்களே இவர்கள் போன்றவர்களால் தான் நாகரீகம் என்ற பெயரில் “தாய்மை, பெண்மை” என்பவை தொலைந்து கொண்டு வருகின்றன. சட்டங்கள் பேசுவதிலும் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் வாயைத் திறந்தால் மூடமாட்டார்கள். “சமவுரிமை”  என்ற பெயரில் “குடும்பம்” என்ற கோயிலை சரித்து வருபவர்கள். சமையல் தெரியாது, சின்ன பொத்தான் கூட தைக்கத் தெரியாது இந்தத் தையல்கள் தானா நாட்டின் சட்டங்களை சமைத்து உரிமையைத் தைக்கப் போகின்றார்கள்? அரைகுறை ஆடைகளுடன் போகும் நமக்கு “சேலை” பற்றி பேச என்ன தைரியமிருக்கிறது? நீ நல்ல மகளாய், சகோதரியாய், மாணவியாய், காதலியாய், தாரமாய், தாயாய் வாழ வேண்டும். அந்த கவிதை வாழ்வில் காணும் குறை வரிகளை திருத்தும் போது தான் கவியும் நல்லாயிருக்கும் கருத்துள்ளதாகவும் இருக்கும் பெண்ணே!

முதலாம் வகையினர் வேண்டும் என்று தான் புரட்சிக் கவிஞர் பாரதி கனவு கண்டான். குடும்பத்தை ஒரு கையிலும் சமூகத்தை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு நடக்கின்ற பெண்ணைத்தான் தேடினான். இவ்வகைப் பெண்களை தான் “சிங்கப்பெண்” என்பார்கள். (உதாரணத்திற்கு கண்ணை மூடி அருந்ததி அனுஷ்காவை நினைத்துக்கொள்ளுங்கள் தைரியத்திற்காக மட்டும்….) இவர்கள் தான் நாட்டின் கண்ணென போற்றப்பட வேண்டியவர்கள் . இவர்களுக்குத் தான் முன்னிரு வகையினரை விடவும் பிரச்சினைகள் தோன்றிய வண்ணமிருக்கும். ஆனாலும் சமாளித்துப் போவதில் தான் இவ்வகைப் பெண்களுடைய வெற்றியே உள்ளது.

ஒரு பெண் எந்தளவிற்கு மென்மையாக இருக்கின்றாளோ அதேயளவு தைரியமும் இருக்க வேண்டும். காரணம் நம்மைச் சுற்றி
  • வேஷம் போட்டு பிறர் மனை கவர நினைக்கும் இராவணன்கள் இருக்கிறார்கள்
  • சேலையுரிய காத்திருக்கும் துச்சாதனன்கள் இருக்கின்றார்கள்.
  • திட்டம் தீட்டும் கூனிகள் இருக்கிறார்கள். (பெண் வில்லிகளுக்கு உதாரணம்)
பெண்ணே!! உனக்குத் தேவை வேல்விழிகள் அழகிற்காக மட்டுமின்றி கயவர்களை குத்தவதற்கு…. நெருப்பாயிரு கண்டவரும் உன்னை அண்டிட துணியார்…. பெண்ணுக்கு அழகு தைரியம் தான்!!!

மதுரையை எரித்த கண்ணகிக்குத் தான் சிலையுண்டு.. தீக்குளித்த சீதைக்கல்ல என்பதை மனதில் இருத்துங்கள். தாங்கும் பூமாதேவியை விடவும் கனல் கக்கும் காளிக்குத் தான் பக்தர்கள் அதிகம். நதியும் நீ தான் அதுவே சேர்ந்து கடலாகி கொந்தளித்தால் சுனாமியும் நீதான்!!!! 


 பெண்ணே ரோஜாவாகவிரு மென்மையுடனும் கூடவே முள்ளுடனும்!!!

(இதற்காக வாள் பயிற்சியெல்லாம் எடுத்து மேக்கப்பெல்லாம் கலைந்து பேய் மாதிரி இருக்க தேவையில்லைங்க… கண்ணைப் பார்த்து கேள்வி கேட்டாலே போதும் பாதிப்பேர் பயந்தோடி விடுவார்கள்.)



No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை