Wednesday, July 3, 2013

அப்பாவின் இளவரசி!

குடும்பம் என்பது ஓர் பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் என்னளவில் கூறுவேன் அது ஓர் அழகிய குருவிக்கூடு போன்றதென்று.. அதிலும் ஓர் பெண்ணுக்கு இரு கூடுகள் உண்டு. பிறந்த வீடு மற்றது புகுந்த வீடு. புகுந்த வீட்டில் அதிஷ்டத்தினை பொறுத்து மகாராணியாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் பிறந்த வீட்டில் ஒவ்வொரு பெண்ணும் இளவரசி. அதிலும் அப்பாக்களுக்கு தங்கள் பெண் ஒவ்வொருவரும் குட்டி இளவரசி தான்.


தன் மனைவி கருத்தரித்தவுடன் மகிழும் ஒவ்வொரு ஆணும் பிறந்திருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவார்களாம். அன்று கையிலேந்தி தங்கள் பெண் குழந்தையில் நெற்றியிலிடும் முத்தம் ஒவ்வொரு தந்தையும் தங்கள் பெண் இளவரசிகளுக்கு வைக்கின்ற குட்டி கீரிடம்…. கூடவே அப்பாக்களுக்கு பொறுப்புகளும் அதிகரிக்கும் நாள்.

ஒருவேளை தமிழ்க்கலாச்சாரத்தில் வரதட்சணை பிரச்சினை இருப்பதால் ஒரு சிலர் பெண் குழந்தைகளை பாரமாக கருதக்கூடும். இது சமூகம் அவர்களுக்கு கொடுக்கின்ற ஒரு விதமான அழுத்தமும் கூட.. ஆயினும் பெண் குழந்தைகளை விரும்பாத, அவர்களது சிறு அசைவுகளைக் கூட குறித்து வைக்காத தந்தையர்கள் மிகமிக குறைவு.

கையில் தூக்கிய தங்கள் வீட்டு தேவதைகளை இன்னொருவனுக்கு கரம்பிடித்து கொடுக்கும் வரை தந்தையர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறைகள் இருக்கின்றதே வார்த்தைகளில் அதை சொல்லிவிட முடியாதுங்க… ஒரு கதைக்கு வேணுமின்றால் ஆண் குழந்தைகளை தங்கள் பெயர் சொல்லப் பிறந்தவர்கள் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டாலும் அப்பாக்களின் பார்வை மட்டும் என்னவோ பெண் குழந்தைகளை விசேடமாக தொடர்வது மறுக்க முடியாத உண்மைங்க.. எந்தவொரு தந்தைக்கும் தம் பெண் குழந்தைகள் தொடர்பில் சில விடயங்களில் மாறுபட்ட கருத்து கிடையாதுங்க
  • தன் பெண் தான் உலக அழகி (சப்ப பிகர் என்றாலும்)
  • அவளைக் கடக்கின்ற எந்த ஆணும் அவளைத் தான் சைட் அடிக்கின்றான் (இவனுகளால் நாம அப்பாவிடம் வாங்கிற அடி…..)
  • தான் தன் பொண்ணை கண்டிக்கலாம், தண்டிக்கலாம் ஆனால் மனைவி கடிந்து கொண்டால் பொறுக்காது
  • வீட்டில் சண்டை வந்தால் 1 வீதமாவது பொண்ணுக்கு சார்பாக தானிருக்கும்
  • வைபவங்களுக்கு என்ன பொருள் எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் பெண்ணுக்கு ஒரு ரூபாவாவது அதிகமாயிருக்கும்.
(இன்னும் பல இரகசியங்கள் இருக்கிறது… பையன்கள் கடுப்பாகிக் கொண்டிருப்பதால் விட்டுவிடுகிறேன்….)

பருவத்தினை எட்டி நிற்கும் போது தாய்மார் உரிய வயதில் திருமணம் செய்து வைக்க வரன் தேடுவார்கள். கூடவே தந்தையர்களை பார்த்து “இந்த மனிசனுக்கு அக்கறையில்லை” என்றும் திட்டுவார்கள். அப்படியெல்லாம் இல்லைங்க… “நம்ம பொண்ணை இன்னொருவனுக்கு மணமுடித்து கொடுத்து விட்டால் தம் உரிமை, தன் மீது பெண் வைத்துள்ள அன்பு பங்கிடப்பட்டுவிடும்” என்கிற கவலை தான் காரணம் என்பது தான் உண்மை.

எனக்கும் அப்படியொரு அனுபவமுண்டு. வீட்டில் வரன் பேசி புகைப்படத்தினை காட்டியிருந்தார்கள். பார்த்து விட்டு அப்பாவிடம் “உங்களுக்கு பிடித்திருக்கின்றதா அப்பா? திருமணம் ஆனால் வெளிநாடு போய்விடுவேனே… உங்கள் சம்மதம் தான் என் சம்மதம்…..” என்று சொன்னேன் பாருங்க.. என்ன சுட்டுச்சோ இல்லையோ விட்டுத்தூர போய்விடுவேன் என்பது நிச்சயம் மனதை தொட்டிருக்கும். அடுத்த நிமிடமே படிப்பு முடிந்த பின் பார்ப்போம் என்று சொல்லிவிட்டார். (எனக்குப் பிடிக்கனும் முதல்ல ஆனாலும் அப்பாக்கு ஐஸ் வைக்க குடுத்த பில்டப்!) அம்மா தான் கடுப்பாகி கத்தினார். (ஹஹஹ… ஆனாலும் தப்பிட்டேனில்ல)
இன்னொரு விடயம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் அம்மாவிடம் கெஞ்சுவதை விட நான் அப்பாவை கொஞ்சிதான் சாதிப்பதுண்டு. அது தான் இலகுவான குறுக்கு வழி…

என்ன தான் சொல்லுங்க இந்த அம்மாக்களுக்கு தங்கள் ஆண் பிள்ளைகளிடம் தான் அன்பதிகம். அது போல் தாங்க அப்பாக்களுக்கு பெண் பிள்ளைகள் மீது! உளவியல் ரீதியாகவும் இந்த எதிர்ப்பால் கவர்ச்சிகள் பற்றி பல கருத்துக்கள் உண்டு. இவ்வாறான எதிர்ப்பால் கவர்ச்சி இல்லாவிடின் அது “முரண்பாட்டு மனநிலை” எனவும் கொள்ளப்படுகின்றது. (இது தாங்க அண்ணாமாருக்கு தம்பிகளை விடவும் தங்கைகளில் பாசம் அதிகமாயிருக்க காரணம்)

சடங்குகளில் கூட சில பாரம்பரியங்கள் உண்டு. கிறிஸ்தவ சமய திருமணத்தில் பெண்களை தேவாலயத்திற்கு தந்தை தான் கைப்பிடித்து அழைத்து வந்து பீடமருகில் நிறுத்தவார். அதேபோல் இந்து முறைப்படியும் பெண்ணை தந்தை தான் தாரைவார்த்துக் கொடுப்பார்.



உண்மையில் ஒரு பெண்னோட முதல் காதல் தன் தந்தையில் தாங்க.. அம்மா எவ்வளவு தான் தொண்டை கிழிய கத்தினாலும் அப்பாவின் ஒரு சொல்லுக்கு அடிபணிவோம் பாருங்க அது தாங்க பெண்ணுக்கும் அப்பாவுக்குமான காதல்….. தினம் அம்மா சமைத்து தருவதை விட அப்பா செய்து தந்த கறியின் சுவை நாவில் தங்கியிருக்கும் அது தான் அந்த காதல்….. அம்மா அடித்த ஆயிரம் அடிகள் வலித்திருக்காது அப்பா எப்போதோ தந்த கன்னத்து அறை வலிக்கும் பாருங்க அது தான் பெண்ணுக்கும் அப்பாவுக்குமான காதல். ஆனாலும் அந்த கன்னத்து அறை ஒரு சுகமான வலியாகத் தான் மனதில் தங்கியிருக்கும்.

அம்மா என்னைப் பார்க்க வேண்டும் என்று கெஞ்சினாலும் போக மனம் இடந்தராது. ஆனால் அப்பா “மகள் வரவில்லையா?” என்று அம்மாவிடம் கேட்டதாக அறிந்தவுடன் வீடு செல்ல கலண்டரருகில் நின்று நாட்களை எண்ணிப்பார்க்கின்றேனே அது தான் எனக்கு என் அப்பா மீதுள்ள காதல்….


 என்னையும் ஒருவரிடம் கைபிடித்து கொடுக்க போகும் போது என் அப்பாவின் கண்கள் கலங்குமே அது தாங்க எனக்கும் என் அப்பாவிற்குமான காதலின் உச்சமான கவிதை!



நாளை எனக்கு ஒரு பெண் பிறந்து அதை என்னவன் கொஞ்சும் போது எனக்கும் என் அப்பாவிற்குமான அன்பை மனம் மீட்டிப்பார்க்கும் பாருங்க அதுவும் அழகியதொரு கவிதை..!!! அர்த்தமானதும் கூட!!! 







பெண்ணின் முதல் காதலன் அவளின் தந்தை -  அப்பாவின் தேவதை அவரின் பெண்

1 comment:

அதிகம் வாசிக்கபட்டவை