Friday, February 14, 2014

எது அது???

அழகியதொரு விடயத்திற்கான நாளுக்காக எல்லோருமே காத்துக்கொண்டிருக்கின்றோம். அதாங்க பெப்ரவரி 14… 
ஒரு கொண்டாட்ட நாள் என்றால் எமக்கு சிரிக்க தோன்றும். அதுவே மரண வீடென்றால் அழவைக்கும், இன்னும் சில நிகழ்வுகள் நம்மை சிந்திக்க வைக்கும்…… ஆனால் நினைக்கும் போதே பலரை சிரிக்கவும், பலரை அழவைக்கவும், பலரை சிந்திக்க வைக்கவும் என பலவித குணவியல்புகளை உருவாக்க கூடிய சக்தி ஒரு தினத்திற்கு முடிகின்றதென்றால் அது இந்த நாள் தான்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பலரை கடக்கின்றோம். சின்ன வயசில கூடப் படித்த குட்டீஸ் (நாமளும் அப்ப குட்டியா தான் இருந்திருப்பம்) , பாடசாலை போகும் போது பார்க்கின்ற பெடியன்கள், பெட்டையள் (அண்ணாவின் நண்பனையும், நண்பியின் அண்ணாவையும் இரகசியமாக லுக்கு விட வைக்கும்….. அவ்…அவ்), யுனிவசிட்டி விடலைகள் , எம்முடன் வேலை பார்ப்பவர்கள் என்று 1000 ஆண்களையும் பெண்களையும் கடந்திருப்பம்… ஆனா யாரோ ஒருத்தியிடமோ அல்லது ஒருவனிடமோ மட்டும் குழந்தையாக நம் மனம் தாவி ஓடுமே அது தாங்க காதல்….

பிறந்ததிலிருந்து நம்மை கண்ணும் கருத்துமாக பார்க்கின்ற அப்பாவை எதிர்த்து பேச வைக்கும்… மடியில் போட்டு தூங்க வைக்கின்ற அம்மாவை தூக்கியெறிய வைக்கும்… எங்கிருந்திருந்தாலும் நம்மை கண்ணால் தொடர்கின்ற அண்ணாவின் அக்கறையை துச்சமாக நினைக்க வைக்கும்….. செல்லமாக நம்முடன் சேட்டை விடுகின்ற குட்டித் தம்பியிடம் கோபம் கொள்ள வைக்கும். நம்மை சூழவுள்ள அனைத்தையும் மறக்க செய்து தனித்தீவாக்கி விடும் இந்த காதல்…

ஆனால் காதலிக்கின்ற நாம் எம் காதலில் எப்படியிருக்கின்றம்?? ஒருவரிடம் காதலை சொல்லும் போது இருக்கின்ற வேகம், பாச அளவு கடைசி வரைக்கும் இருக்கின்றதா என்பதில் தான் “காதல்” முழு பரிணாமடைகின்றது.“செல்லம்” ஆக இருந்தவள் “தொல்லை” ஆவதும் “நல்லவன்” ஆக தெரிந்தவன் “நரகமாக” தெரிவதும் எதனால்?? நம்முள் இல்லாத தெளிவின்மைகளாலேயே…. இந்த காதல் என்கின்ற உணர்வில் கூட பலவகையுண்டு.

ஒரு பதினெட்டு – பத்தொன்பது வயசில் தன் கட்டுப்பாட்டை விட்டு மனசு ஒரு தாவு தாவிவிட்டு, “அய்யய்யோ! இது நடக்காது” என்று போன வேகத்தில் திரும்பிவந்து கொஞ்சம் பரவசத்தோடும் கொஞ்சம் பரிதவிப்போடும் “அது ஒரு காலம்” என்று காலமெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருக்குமே… அதுதான் “அது”.

ஓர் ஆணும் பெண்ணும் உறவுகொள்ள, சடங்குகள், சம்பிரதாயங்களோடு சம்மதம் வாங்கிக் கொண்டால் ஊர் அதைக் கல்யாணம் என்கிறது.

பெண் மீது ஆண் மட்டுமோ ஆண் மீது பெண் மட்டுமோ ஆசைப்பட்டு, கனவுகளையும் ஆசைகளையும் நெஞ்சில் கரணை கரணையாகக் கட்டிவைத்திருந்தால் இலக்கியம் அதை “ஒருதலைக் காதல்” என்கிறது.

ஓர் ஆணின் மனசும் பெண்ணின் மனசும் ஒன்றோடுடொன்று இடறிவிழுந்து, இடறிவிழுந்த மனசுகளின் சம்மதத்தோடு உடம்புகளும் தொட்டுக்கொண்டு, இன்பம் போல ஒரு துன்பத்தையும் துன்பம் போல ஒரு இன்பத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்தால் உலகம் அதைக் “காதல்” என்கிறது.

“இதோ பார்! நீ எனக்கில்ல: நான் உனக்கில்ல. ஆனா நீ எனக்கு வேணும்: நான் உனக்கு வேணும். உன்னால் சுகம் எனக்கு: என்னால் சுகம் உனக்கு. போகிற போக்கில் போவோம். காலம் எங்கே நம்மைப் பிரியச் சொல்கிறதோ அங்கே லாபநட்டக் கணக்குப் பார்க்காமல் பிரிந்து கொள்வோம்.” இந்த ஒப்பந்தத்தோடு நடக்கிற உறவுக்குக் “காமம்” என்று பெயர்.

“உனக்குள்ளும் அது இருக்கிறது. எனக்குள்ளும் அது இருக்கிறது. நான்கு கண்களுக்குள் மட்டும் மினுக் மினுக் என்று அது மின்னுகிறது. வட்டமிட்டுச் சுற்றிவரவுமில்லை: திட்டமிட்டுச் சொல்லவும் முடியவில்லை. ரெண்டு மனசிலும் கனக்கிறது ஒரே பாரம். இறுதிவரை இறக்கி வைக்கவே இல்லை. கடைசியில் பிரிகிறோம் - இதயங்களுக்குள் குழிவெட்டி பாரங்களைப் புதைத்துக் கொண்டு” இந்த அனிச்சப்பூவின் அரும்பு போலிருக்கும் அந்த மெல்லிய உறவுக்கு எந்தப் பெயரை வைக்கலாமோ அந்தப் பெயரை வைக்கலாம்…..

முதலில் உங்களுள் தோன்றியுள்ள உணர்வினை எவ்வகையினது என்று கண்டுகொள்ள முயற்சியுங்கள். அதன் பின் காதலியுங்கள்… காதல் என்ற ஒன்றிணை தெரிந்த பின் கோழைத்தனமாக விட்டோடி விடாதீர்கள்…. ஒருவேளை தோற்றுவிட்டாலும் உங்கள் காதல் உண்மையென்றால் வாழ்ந்து காட்டுங்கள்!!! காதல் என்பது கல்யாணத்தில் முடிவதல்ல… காலமெல்லாம் தொடர வேண்டும்…  கல்யாணத்தில் மட்டுமே முடிவதுமல்ல… தோற்றாலும் நம் மனங்களில் இருக்க வேண்டும். “காதலில் யாருமே தோற்பதில்லை… காதலர்களை தெரிவதில் தான் தோற்கின்றோம்” அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை