Tuesday, September 10, 2013

வாழ்வெனும் மலர்……

அழகான பூவொன்றினை கவிஞன் ஒருவன் கண்டான். அரிய வகையான அம்மலரினை கண்டதிலிருந்து கவிஞனுக்கு கவிதை கொட்ட ஆரம்பித்தது. அவனது கவி வரிகளில் தம்மை மறந்த இரசிகர்கள் கற்பனையிலேயே அந்த மலரினை காணத்தொடங்கினதும் அல்லாமல் விரும்பவும் தொடங்கினர்.

இதே மலரினை ஆராய்ச்சியாளன் ஒருவனும் கண்டான். அந்த மலரை பிரித்து
 மேய்ந்து அதன் தாவரவியல் குடும்பம் தொடங்கி மகரந்தம் எப்படி பரவலடைகிறது என்பது வரை துல்லியமான ஆராய்ந்து பலவித ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தான். விருதுகளும் கிடைத்தன.


இவ்வகை மலரினை பக்தன் ஒருவன் கண்டான். அண்டாசராசரங்களையும் படைத்து ஆளுகின்ற இறைவனின் பாதகாணிக்கை ஆக்குவதே அம்மலருக்கான சிறப்பு என்று என்று எண்ணிணான். அம்மலரினை பறித்து இறைவனின் பாதமலர் சாற்றினான்.

 
ஓவியன் ஒருவன் கண்டான். பல கோணங்களிலும் நின்று பார்த்து அதன் அழகை கண்டு பிரமித்தான். தன் ஓவியத்திறமையால் அம்மலரினையே பிரதி எடுத்ததினை போன்று ஓவியம் தீட்டினான். பல கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தினான். பலர் அவனை வியந்து பாராட்டினர்.

 
ஒரு பெண் இப் பூவினை பார்த்தாள். அதன் அழகில் ஈர்க்கப்பட்டாள். பறித்து தலையில் சூடிக்கொண்டாள். காலையில் சூடிய மலர் மாலையில் வாடியவுடன் தூக்கியெறிந்து விட்டாள்.




மேற்கூறிய உதாரணங்களை மீண்டும் வாசித்தீர்களாயின் ஒவ்வொரு உதாரணங்களிலும் பலவித ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்துள்ளதை விளங்கிக்கொள்வீர்கள்.

இப்படித்தாங்க நம் வாழ்க்கை எனும் மலரும். அதுவொரு அதிசய மலர். அரிதானதொன்று. மலர் எப்படி காலையில் மலர்ந்து மாலையில் வாடி விடுகிறதோ அப்படித்தான் நம்முடைய ஆயுட்காலமும். அதை நாம் எப்படி வாழ்கின்றோம் , எந்தக் கண்ணோட்டத்தில் அணுகுகின்றோம் என்பதில் தான் நமது வாழ்வின் பெறுமதியே இருக்கின்றது. எப்படியும் வாழலாம்….. இப்படியும் வாழலாம்…. ஆக வரையறைகள் கூட நம் கையில் தானுண்டு. வாழ்கின்ற இந்த சொற்பக் காலத்தில் அர்த்தமுள்ளதாக வாழ்கின்றோமா….? சிந்திப்போம்.

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை