மனம் + மனம் = திருமணம்
இந்தப்பதிவில் மூன்ற காலகட்டங்களில் இடம்பெற்ற காதல் வாழ்க்கை குறித்து பேச நினைக்கின்றேன். என்ன தான் மனதில் கடுப்பிருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட்டு ஏதாவதொரு புள்ளியில் அவர்களை காயப்படுத்திவிடக் கூடாது என்பதால் சில பெயர்கள் மற்றும் தனியடையாளங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் முழுவதும் கற்பனையல்ல. முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
கதை – 01 மட்டக்களப்பானும் - யாழ்ப்பாணத்தாளும்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபலமான சட்டத்தரணி பிள்ளை அவர்கள். அவர் வாதாடிய எத்தனையோ வழக்குகள் இன்றும் மேற்கோள்காட்டப்படுகின்றன. இவர் ஒரு கட்டத்தில் இன்று தேசியத்திற்காக போராடுவதாக சொல்கின்ற ( சொல்கின்ற என்பதை மூன்று தடவை வாசித்துக்கொள்ளுங்கள்) கட்சியின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களித்த ஒருவர். இவர் வாரிசுகள் மற்றும் அள்ளக்கைகள் இன்றும் கட்சியை நடாத்துகின்றார்கள் என்பது கொசுறுத் தகவல். இந்தப் பிள்ளை அவர்களுக்கு இரு முகம் உண்டு. வெளியில் பிரபல்யமானவர், தன்னை கேட்பவர்களுக்கு உதவி செய்பவர், தானம் செய்வதில் கர்ணன் இப்படி நீளும் இவர் பெருமை. ஆனால் அடுத்த முகம் சாதிவெறி , பிரதேசவாத வெறி மற்றும் மதவெறி பிடித்த அசிங்கமான முகம். வீட்டின் உடைகளை சலவை செய்து வருபவருக்கு தண்ணீர் கொடுப்பதற்கென்றே வேறான திண்ணையும் கிண்ணமும் வைத்திருப்பவர். எந்த வில்லனுக்கும் ஒரு புள்ளியில் மென்மை நிலை காணப்படும் என்று உளவியல் சொல்கின்றது. பிள்ளையின் வீக்னஸ் அவரது ஒரே மகள். இரு ஆண்பிள்ளைகளுக்குப் பின் பிறந்த கடைசி மகள். ஆனால் குணத்தில் பிள்ளைக்கு நேரெதிர் ஆனவர். காதல் யாரைத்தான் விட்டது. அது பிள்ளையின் மகளாரையும் விடவில்லை. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது அங்கு பகுதிநேர விரிவுரையாளராக இருந்த மட்டக்களப்பு பொடியன் மீது வந்திருக்கின்றது. பொடியன் இந்து மதத்தினை சார்ந்தவர். காதலையும் கர்ப்பத்தினையும் மறைக்க முடியாதல்லவா? பிள்ளையின் அள்ளக்கையொன்று வீட்டில் கொளுத்திப் போட ஆரம்பித்தது பிரச்சினை. மகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு அவசரமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிள்ளையின் மகள் விரும்பிய மட்டக்களப்பான் லேசுப்பட்ட ஆளில்லை. மட்டக்களப்பின் பிரபல்யமான போடியாரின் மூத்த மகன். குடும்பத்திற்கென்றே இரு கோயில்கள் இருக்கின்றன. (இன்று 2024 இலும் இவர்கள் குடும்பம் முன்னின்று பூஜை செய்கின்றதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.) இதெல்லாவற்றினையும் விட மண் மீதும் தன் இன மக்கள் மீதும் பற்றுக்கொண்டவர் இயக்க பெடியன்களுக்கு கூட பொருளாதாரம் படிப்பித்ததாக கதைகளுண்டு. மண்ணை நேசிப்பவர்கள் பொதுவாக பெண்ணையும் அதே உறுதியுடன் நேசிப்பதுண்டு. இந்த மட்டக்களப்பானும் பிள்ளையின் மகளாரின் ஆளுமையை நேசித்ததில் வியப்பிருக்கவில்லை. ஆனால் இவர் பயங்கர கொதியனும் விறுக்கனும் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பிள்ளை அவர்கள் மகளுக்கு கல்யாணம் பேச மட்டக்களப்பான் வீடேறி பேச முயல பிள்ளையின் கோபமும் மட்டக்களப்பானின் விறுக்குத்தனமும் முட்டிக்கொண்டதில் பிள்ளையின் மகள் அனைத்தையும் விட்டு மட்டக்களப்பான் வாங்கிக்கொடுத்த உடுப்பை மட்டும் மாற்றிவிட்டு வெளியேறி விட்டார். “அவனை விட்டுவிட்டு வந்தால் , மறந்திட்டு வந்தால் அல்லது அந்த மட்டக்களப்பான் செத்தால் தான் எனது மரண அறிவித்தலில் கூட மகளின் பெயர் வரவேண்டும்" என்று தன் மகன்களிடமும் குடும்பத்தினரிடமும் சத்தியம் வாங்கி மகளை தலை மூழ்கிவிட்டார் பிள்ளை.
தன் வருங்கால மனைவியுடன் மட்டக்களப்பு வந்தவருக்கு “வேதக்காரப் பிள்ளை எப்படி மருமகளா வரலாம். கொண்டு போய் விட்டுட்டு வீட்டுக்குள்ள வா என்டு போட்டார் அரிவாளைப் போடியார். விறுக்கு குணம் சும்மாயிருக்குமா?
சரி இரண்டு பக்கமும் வேண்டாம். எனக்கு நீ உனக்கு நான். எந்தக்காலத்திலும் இரு பக்கத்திலும் எதற்கும் போய் நிற்கக்கூடாது. அப்படி நின்றால் நம் காதல் செத்து விட்டது என்ற அர்த்தம் என்று மட்டக்களப்பான் எடுத்த முடிவிற்கமைய சைவ நாராயண போடியாரின் மகனும் பிரபல கத்தோலிக்க சட்டத்தரணி பிள்ளையின் மகளும் கத்தோலிக்க முறைப்படி மரியாள் தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டு மாமாங்கப்பிள்ளையார் கோவிலில் தாலி கட்டி எளிமையாக வாழ ஆரம்பித்தார்கள். வாழ்தலில் மனம் தானே கணக்கு. முன்னூறு முக்கோடி தேவர்களின் வாழ்த்துக்கள் அதற்கு போதுமானது தானே
இந்தக்கல்யாணத்திற்கு எந்த சொந்தமும் பொறுப்பேற்றிருக்கவில்லை.
பிற்குறிப்பு: திருமணத்தின் பின்னர் இந்தத்தம்பதிகள் செல்லச்சண்டைகள் போடும் போது “என்னை வீட்டை விட்டு வரச்சொல்லி அப்பாவோட சண்டைபோட்ட நேரம் உடுப்பு வாங்கி தந்தீர்களே , அந்த நிறம் எனக்கு பொருத்தமாகவா இருந்தது? உங்களுக்கு உடுப்பெல்லாம் பார்த்து வாங்கத் தெரியா என்று பகிடி பண்ணுவாறாம் மட்டக்களப்பானின் மனைவி
இரண்டாம் கதை விரைவில் பதிவிடப்படும்.........
Comments
Post a Comment