Monday, November 4, 2013

Good bye: see you tomorrow - Directed by Janusz Morgenstern

கடந்த வாரம் என் ஊடக கற்கைநெறி விரிவுரையாளரின் அழைப்பின் பெயரில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் போலந்து பட விழாவிற்கு சென்றிருந்தோம். இக் குறுந்திரைப்பட விழாவில் இரண்டாவது காட்சியில் திரையிடப்பட்ட திரைப்படம் “Good bye: see you tomorrow” . தொன்னூறு நிமிடங்களேயான இக்குறுந்திரைப்படம் குறித்து எழுதியேயாக வேண்டும் என்ற முனைப்பிலேயே இப்பதிவு அமைகிறது. என் தனிப்பட்ட கண்ணோட்டத்தில் மட்டுமே விமர்சிக்கப்படவுள்ள இத்திரைக்கதை யாரையாவது புண்படுத்துவதாக அமைந்தால் மன்னிக்கவும்.

திரைப்படத்தின் ஆரம்ப காட்சியே கருந்திரையில் கைகளின் அசைவுகளுடனேயே ஆரம்பமாகியது. பாலத்தின் அருகில் நின்ற இரசித்துக்கொண்டிருக்கும் ஓர் இளைஞன் வழிகேட்கின்ற குரல் கேட்டு திரும்பிப்பார்க்கின்றான். அழகிய இளம் பெண்… பார்த்தவுடனேயே பிடித்துப்போய் பின்தொடர ஆரம்பிக்கின்றான். நடனம், டெனிஸ் என்று பல்துறைகளிலும் சிறந்து விளங்கும் அப்பெண்ணை மடக்க நினைத்தும் இயலாமையில் தவிக்கின்றான். போகப்போக அப்பெண் குழந்தைத்தனத்துடன் இவ்விளைஞனுடன் நண்பியாகி விடுகின்றாள்.

நாடகக்கலைஞனான இவ்விளைஞனின் நாடகங்கள் காட்சிப்படுத்தப்படும் அரங்கிற்கு வருவதும் அவன் நண்பர்களுடன் தானும் நட்பாக பழகுவதுமாக தன் அன்றாட பழக்கங்களை மாற்றிக்கொள்கின்றாள். இதே போன்று விடுதியில் வசிக்கும் அவளைப்பார்க்க தினமும் வரும் கதாநாயகன் அவள் விரும்பும் இடங்களுக்கு கூட்டிச்செல்வதும் அவள் குழந்தைத்தனங்களை இரசிப்பதுமாக தொடர்கிறது இவர்களது உறவு. ஒரு கட்டத்தில் தன் காதலை சொல்லிவிடுகின்றான். ஆனால் அவள் அதற்கும் அதன் பின் அவன் ஒவ்வொரு தடவையும் காதலை சொல்லும் போதும் கண்டும் காணாதது போலவே இருக்கின்றாள். திடீரென அவள் எங்கோ போகவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. தன்னை வந்து சந்திக்கும் படி கடிதத்தில் தெரிவிக்கின்றாள். கதாநாயகனும் போய் விடுதி வாசலில் சந்திக்கின்றான். சிறிது நேர உரையாடலின் பின் Good bye: see you tomorrow” என்று கூறிவிடுகின்றாள். சந்தோஷத்தில் மிதக்கும் கதாநாயகன் மறுநாள் காலையில் விடுதிக்கு வருகின்றாள். ஆனால் அப்பெண் இல்லை. எங்கோ போய்விட்டிருப்பாள்.

அழகிய காட்சியமைப்பில் ஆழமான காதலை சொல்லிவிடுகின்றார் இப்படத்தின் இயக்குநர் Janusz Morgenstern.  அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமலும் ஆடம்பரம் இல்லாமலும் இலகுவாக நகர்ந்திருந்தது திரைக்கதை. கதாபாத்திரங்களுக்கேற்ப நடிகர்களின் தேர்வும் நடிப்பும் அருமை. 

இக்கதையில் மூன்று காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. முதலாவது காட்சி கதாநாயகனை ஒருதலையாக காதலிக்கும் அவனுடன் பணிபுரியும் பெண் “ஏன் நீ என்னை காதலிக்கவில்லை?” என்று கேட்பாள். அதற்கு கதாநாயகன் “உன்னருகில் நான் எதையும் உணரவில்லை…..” என்று பதிலளிப்பான். உண்மை ஒரு ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தினம் எத்தனையோ பேர் நம்மைத் தாண்டிப் போவர்கள். ஆனாலும் ஒருவர் அருகில் நாம் ஏதோவொரு வித்தியாசத்தினை உணர்வோமில்லையா…. அதுதாங்க காதல்

இரண்டாவது காட்சி இருவரும் ஒரு பழைய தேவாலத்திற்கு சென்று திருமணத்திற்கு ஒத்திகை பார்ப்பார்கள். குருவானவர் முன்னிற்பதாக கற்பனை செய்து கொண்டு சம்மதம் தெரிவித்துக்கொள்வதும்…. கதாநாயகன் மோதிரம் மாற்ற எத்தனிக்கும் போது நாய்க்குட்டி ஒன்று ஓடிவருவதை பார்த்து அவள் கையை உதறிவிட்டு ஓடிவிடுவதும்…. ஒரு அழகிய கவிதை என்னளவில்….

மூன்றாவது காட்சி… காதலி போய்விட்டவுடன் இருளுக்குள் அமர்ந்துகொண்டு இரு கரங்களிலும் சிகரெட் கொளுத்திக்கொண்டு இருளில் அந்த சிறு தனலூடாக ஒளிவட்டம் வரைந்து அன்பின் அளவை கணிக்கும் காட்சி… மிகமிக அருமை..

நிச்சயம் தமிழ் சினிமா எனில் ஒரு வில்லன்…. நாலு அடியாள்கள்….. கவர்ச்சியின் உச்சத்தில் கதாநாயகி என்று அமர்க்களப்படுத்தியிருப்பார்கள். முடிவில் கூட காணாமல் போன காதலியை தேடிக்கண்டுபிடிக்க வெளிக்கிட்டிருப்பார் நம் கதாநாயகன்….. நம் சினிமாக்கள் உலக அரங்கில் இன்னும் பேசப்படாமலிருப்பதற்கு இவ்வாறான யதார்த்தங்களை தொலைத்த காட்சிப்படுத்தல்களும் ஒரு காரணம்.  

என் வாழ்வில் முதன்முறை திரையரங்கில் பார்த்த திரைப்படம் இது என்பதுடன் கவர்ந்த படமும் கூட….. காதல் என்பது எப்போதும் கவிதையாக இருக்கனும்க… நம்மவர்கள் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் நினைவுகளை மனம் முழுவதும் சுகமான சுமையாக சுமக்க வேண்டும். ஒரு பெண் சிலவேளை தன் குடும்ப சூழ்நிலை கருதி; காதலை ஏற்கமுடியாமல் போகலாம்…. அல்லது பல நிபந்தனைகள் இருக்கலாம்…. ஆனால் அவள் சொல்லாக்காதலை ஒரு துளி கண்ணீர் வெளிப்படுத்தும் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றார் இப்பட இயக்குநர். அவள் கூறுகின்ற இறுதி வாக்கியமே இத்திரைப்பட தலைப்பாகியுள்ளமையும் இன்னுமொரு சிறப்பம்சம்…..

என்னளவில் கூறுவதென்றால் ஓரு படைப்பென்பது அதை சுவைப்பவரின் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். இப்படைப்பின் தாக்கம் கடந்த ஒரு வாரமாகவே நெஞ்சில் தங்கியிருக்கின்றது. இன்னொரு தடவை எனக்கு வாய்ப்புக்கிடைத்தால் இத்திரைப்படத்தினை மீண்டும் பார்க்கமாட்டேன். சில கவிதைகளை ஒரு தடவை மட்டும் படிக்கும் போது இருக்கும் சுகம் திரும்ப திரும்ப படிக்கும் போது போய்விடும்….. அதேபோன்று ஒருமுறை பார்த்ததே போதும்…. இந்த அழகிய காதல் கவிதையின் காட்சிகளை…… என்றும் தங்கியிருக்கும் மயிலிறகின் வருடலாய்…….
 

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை