Thursday, October 18, 2012

கடவுள் ஏன் சிலையானான்.....?


இன்றைய நவீன உலகில் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கின்றது. கடற்கரை, கடைகள், பூங்காக்கள் என சுற்றி வருகின்ற இளந்தலைமுறையினர் வழிபாட்டுத்தலங்களை நினைத்துப்பார்ப்பது சமயவிழா நாட்களில் மட்டுமே. அதுவும் தமது புதிய உடைகளை காட்டுவதற்காகவோ அல்லது வீட்டிலிருக்கும் முதியோர்களின் நச்சரிப்புகளை தாங்கமுடியாமையினாலோ மட்டுமே. எவ்வாறாயினும் இன்று இறைவழிபாடென்பது அரிதாகிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எம் முன்னோர்களை எடுத்துக்கொண்டால் அதிகாலை எழும்புவது முதல் இரவில் உறங்குவது வரை இறைவனுக்கும் இறைவழிபாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் கடவுளின் படங்களோ அல்லது சிலைகளோ இருந்திருக்கின்றது. அதிலும் முன்னைய காலங்களில் சிலை வழிபாடென்பது முக்கியமானதொன்றாக காணப்பட்டது. சிலைகள் செய்வதற்கான கல்லினை தேர்ந்தெடுப்பது முதல் அவற்றினை சிற்பங்களாக வடிப்பது வரை சாஸ்திரங்களை பின்பற்றியதுடன் அவற்றிற்கான வழிபாட்டு முறைகளுக்கும் கூட பலவித அபிஷேக முறைகளையும் ஐதீகங்களையும் வகுத்திருந்தனர். இவற்றை உருவாக்குவதை பிரதானப்படுத்தி இனங்கள் .தொழில்கள் என்பனவும் பாகுபடுத்தப்பட்டன. இதனையொட்டி சிற்ப,செதுக்கல்,நாட்டிய கலைகளும் தோற்றம் பெற்றன.

இவ்வாறான கடவுள்களின் சிலைகள் பெரும்பாலும் கருங்கற்களில் தான் வடிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் என்ன தெரியுமா? பிரபஞ்சத்தினையே படைத்த இறைவனை பஞ்சபூதங்களும் அடங்கிய கருங்கற்களினால் உருவாக்கவேண்டுமென்பதாலேயே.... எவ்வாறு கருங்கல்லானது நீர்,நிலம்,காற்று,நெருப்பு ,ஆகாயம் என்பவற்றை உள்ளடக்குகின்றதென ஆச்சரியமாகவுள்ளதா?

நிலம் - கல்லும், மண்ணும் சேர்ந்தது.
நீர்; - நீர் என்பது பாறைகளிலிருந்து தான் ஊற்றெடுக்கின்றது. ஆகவே நீரின் குணமான குளிர்ச்சியினை பாறைகள் கொண்டுள்ளன.
காற்று – பாறையினுள் தேரை போன்ற உயிரினங்கள் வசிக்கின்றன. அவ்வாறான உயிரினங்கள் சுவாசிப்பதற்கு வளி அவசியம். பாறையினுள் வளி கிடைப்பதனாலேயே அவை அங்கு வசிக்க முடிகின்றது. எனவே கல்லினுள் காற்றடங்கியுள்ளது.
நெருப்பு – ஆதிகாலங்களில் கல்லையும் கல்லையும் உராய்வதன் மூலம் நெருப்புண்டாக்கப்பட்டது. ஆகவே தீயென்பது கல்லினுள் அடக்கமாகின்றது.
ஆகாயம் - ஆகாயம் என்பது சப்தங்களின் தொகுப்பு. கற்களானது சப்தங்களை உண்டாக்குகின்றன.எனவே ஆகாயத்துவமும் இதனுள் உறைந்துள்ளது.

இதனால் தான் அசையா தன்மை கொண்டதாயினும் பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய கல்லினால் எம்மனைவரையும் ஆட்கொள்கின்ற இறைவனை வடிக்கின்றார்கள்.

கடவுள் என்பவன் இருக்கின்றானா? இல்லையா? என்பதைப்பற்றி ஆராய்ச்சிகள் ஒரு புறமும் கடவுளைக் கண்டவர்களுண்டா? அவனுக்கு வடிவங்களுண்டா என்கின்ற விரண்டாவாதங்களும் , கடவுள் என்பவன் எங்குமில்லை என்கின்ற நாத்திகவாதமும் . துன்பங்கள் வரும் போது “கடவுளே உனக்கு கண்ணில்லையா? நீயேன் சிலையாக இருக்கின்றாய் “ என்கின்ற புலம்பல்களும் இன்றும் தொடர்கின்றன....எவ்வாறாயினும் உலோக சக்தி,மனோ சக்தி, மந்திர சக்தி, எந்திர சக்தி, ஆத்ம சக்தி என உறைந்து பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டுள்ள விக்கிரங்களை வழிபட்டு “ அவனின்றி அணுவும் அசையாது” என அவன் காலடியில் சரணடைந்து விடுங்கள். அந்த நம்பிக்கையே உங்களை வாழ வைக்கும்.

                                            மீராபாரதி
                                            மட்டக்களப்பு
பிரசுரம் - தினகரன் 16.10.2012

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை