Wednesday, March 11, 2015

கல்லடிப்பால கறுப்பன்....


சில விடயங்களை நினைத்தவுடன் இசை நினைவிற்கு வரும் சிலநேரங்களின் அந்தந்த சம்பவங்களுக்கென வாசனைகள் உண்டு. சிலவற்றினை நினைக்கும் போது சில அடையாளங்கள் எம்மனக்கண்ணில் தோன்றும். அப்படி “மட்டக்களப்பு” என்றவுடன் எமக்குள் முதல் சிந்தையில் உதிப்பது “கல்லடிப்பாலம்”. கறுத்த கம்பீரமான அதன் தோற்றம் தான் பெரும்பாலும் “மட்டக்களப்பு’ என்பதன் அடையாளமாக கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பிற்கு வராதவர்கள் இருப்பார்கள் ஆனால் கல்லடிப்பாலத்தினை படங்களில் சரி ஒரு தடவை பார்க்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம். கடந்த சில வாரங்கள் நூலகத்தினுள் தொலைந்து கொண்டிருக்கும் எனக்கு இந்தக்கல்லடிப் பாலம் குறித்த சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றினை தொகுத்தே இதை வரைகின்றேன்.

மட்டக்களப்பு நீர்வளம் நிறைந்த பிரதேசம் என்பது நாமனைவரும் அறிந்ததே. இது களப்பு அமைப்பிலும் அமைந்துள்ளதால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல வேண்டுமாயின் நீர் நிலைகளை கடந்தே செல்ல வேண்டும். ஆக போக்குவரத்து தேவையினை கருத்திற்கொண்டு பிரிட்டிஷ்காரர்கள் பாலம் அமைக்க தீர்மானித்தனர். இதனடிப்படையில் மட்டக்களப்பு கல்லடிப்பாலம் கட்டுவதற்கான பணிகள் 1924 ஆம் ஆரம்பிக்கப்பட்டு 1928 ஆம் ஆண்டு நிறைவுற்றது.  இக்காலப்பகுதியில்  இலங்கையின் ஆளுநராக இருந்த சேர்.மனிங் மற்றும் அவரது துணைவியார் லேடி மனிங் அவர்களாலும் இப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலமானது “பாடும் மீன்கள்” வாழ்கின்ற மிகவும் ஆழமான நீர்நிலைகளுக்கு மேலாக அரசடி மற்றும் கல்லடி ஆகிய  இடங்களை இணைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவெனில் பாலத்தின் இரு அந்தங்களிலும் நாற்சந்திகள் அமைந்துள்ளன. இப்பாலத்தின் ஆயுற்காலம் 1985 ஆம் ஆண்டு என குறிக்கப்பட்டிருந்த போதிலும் 2013 ஆம் ஆண்டு வரை இப்பாலம் மட்டும் தான் போக்குவரத்திற்கு புழக்கத்தில் இருந்தது. 2013 மார்ச் 13 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய பாலம் ஒன்று இதற்கு சமாந்தரமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்தக்கல்லடிப் பாலம் எப்படி மட்டக்களப்பு என்றவுடன் சிந்தையில் உதிக்கின்றதோ அதேபோன்று கல்லடிப்பாலம் என்றவுடன் ஞாபகத்தில் தோன்றும் விடயங்களில் ஒன்று “தற்கொலை”. இன்றும் முந்தைய தலைமுறையினர் ஏசும் போது கூட “ கல்லடிப்பாலத்தில இருந்து குதிச்சு செத்துப் போ” என்டு தான் பேசுவதுண்டு. (எனக்கும் பலர் இப்படி சொல்லிருக்கின்றார்கள். குறிப்பாக உயர்தரத்தில் சறுக்கின போது… ஆனாலும் “ஆக்கிமிடிசின் தத்துவத்திற்கிணங்க நான் குதித்து நீர் அவ்வளவும் வெளியேறி சுற்றுமுற்றுமுள்ள கிராமங்கள் மூழ்கிவிடும் என்பதாலும் செத்தாலும் சவம் ஊதி அழுகி மீன் கடித்து அசிங்கமாக இருக்க கூடாது என்கின்ற என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தாலும் நான் குதிக்கவில்லை) இப்படி அவர்கள் இன்றும் பேசும் படியாக இருப்பதற்கான “தற்கொலை”யின் தொடக்கம் குறித்தும் ஒரு கதை உண்டு.

மகேஸ்வரி என்கின்ற தமிழ் இளம்பெண்ணும் மீரா மொகைதீன் என்கின்ற முஸ்லீம் இளைஞனும் உயிருக்குயிராக காதலித்திருக்கின்றார்கள். விஷயம் வெளியே கசிந்து மதத்தினை காரணம் காட்டி யாரும் இவர்களது காதலுக்கு சம்மதிக்கவில்லை என்பதால் இருவரும் பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்களாம். இவர்கள் தொடங்கி வைத்த பின்னர் காதலில் தோற்றவர்கள் முதல் என்னத்தில் தோல்வியடைந்தாலும் கல்லடி பாலத்திலிருந்து குதித்து பலர் இதுவரை தற்கொலை செய்திருக்கின்றார்கள். இதில் பல பிரபலங்களும் அடக்கம். இதற்கொரு உதாரணம் “ராஜபாரதி” என்கின்ற புனைப்பெயரில் எழுதிப் புகழ்பெற்ற கவிஞரான வி.கி.ராஜதுரை என்கின்ற தமிழாசானும் தன்னுடைய இறுதிக்காலத்தில் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்துதான் தன் உயிரை மாய்த்துக்கொண்டாராம்.

இது இப்படியிருக்க சுனாமி, வெள்ள அனர்த்தங்களுக்கு முன்னர் இப்பகுதியில் பாம்புகள் திரள்திரளாக வந்து சென்றதுமுண்டு. இவை பாம்புகள் அல்ல விலாங்கு மீன் வகையில் ஒன்று என்கின்ற கருத்தும் உண்டு. நீர் நிலைகளுக்கடியில் ஆற்றுப்படுக்கைக்கருகில் வாழ்கின்ற இவ்வகை மீன்கள் பூகோளத்தில் பிரளயம் தோன்றும் முன் வேறிடம் நகர்வதற்காக தான் வருகின்ற என்றும் பிரளயம் தோன்றும் முன் உண்டாகின்ற வெப்பத்தினால் தான் மேல் தளங்களுக்கு வருகின்றன என்றும் கூறப்படுகின்றன. சுறா போன்ற பெரிய மீன்கள் கடலிலிருந்து குட்டி போடுவதற்காக பாலத்தின் கீழான ஆழமான பகுதிக்கு வந்து பாலத்தின் அடியிலுள்ள பகுதியில் நோவெடுக்கும் தமது வயிறை உராய்ந்து குட்டிகளை போட்டு விட்டு மீண்டும் கடலுக்கு சென்றுவிடும் என்றும் கூறப்படுகின்றது. இங்கும் கூட பாருங்கள் நீருக்கு மேலுள்ளவைக்கு இது உயிரை மாய்க்கும் இடம் நீருள் இருப்பவற்றிற்கு தமது இனத்தினை உற்பத்தி செய்யும் இடம். ஆக கல்லடிப்பாலம் “ கல்லறையாகவும் கருவறையாகவும்” இருக்கின்றது.

சுமார் 85 வருடம் பிரம்மசரியம் மேற்கொண்ட கல்லடிப்பால கறுப்பனுக்கு இப்ப தான் ஜோடியாக பக்கத்திலேயே ஒரு புதிய பெண் ஒன்று வந்திருக்கின்றா… இனியாவது ஜோடி சேர்ந்த இவர்கள் ஜோடிகளை சேர்த்து வைக்க வேண்டும்…..

நன்றி – நூலகம், செ.குணரத்தினம் அவர்களது குறிப்புக்கள்…. 



இதிலுள்ள படங்கள் என்னால் கிளுக்கப்பட்டவை... 

முதல் படம் - கல்லடி பாலம்
 
இரண்டாவது படம் - அருகில் மீன் பிடிக்கும் மீனவர் ஒருவர்

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை