Friday, May 2, 2014

ஒற்றையடி பாதை.....

தொலைந்து….
தொலை தூரம்…
போய்விட துடிக்கின்ற இதயம் - உன்
தொலைபேசி பிரியங்களில்
மீண்டும் உனக்கான
அடம்பிடித்தல்களில் தான்
புதைந்து போகின்றது….

ஊமைப் பொழுதுகளில்
தனிப்பாதை வகுக்க
நினைக்கும்
நிமிடங்களில்
ஆழ்மனதிலிருந்து
அமிழ்ந்திருந்த பந்தாக
விளிம்பை
எட்டிப்பிடிக்கின்றன - உன்
நினைவுகள்…..

பாலைவனத்தில்….- என்
பாதச்சுவடுகள்
பாதி தூரம்
கடந்த பின்….
பசுமை கரங்கள்
நீட்டுவாய்
அந்த
தழுவல்களுள்
ஒளிந்து கொள்கின்றேன் நான்…..

கோபங்களும் - என்
வலிகளுடனான
உணர்வுகளும் - உன்னை
வலிக்க வைக்க
கோர்த்த வார்த்தைகளும்
கண்ட பொழுதில்
கண்ணீராகித்தான்
கரைகின்றது……

எப்படியோ....
பாதைகளற்ற – என்
வனாந்தர வாழ்விற்குள்
புகுவதற்கான
ஒற்றையடி பாதையை
கண்டறிந்து கொள்கின்றவன்
 நீ….

மீண்டும்
விலகுவாய்…
வலி தருவாய்….
அலட்சியம் செய்வாய்....
என்று புரிந்தும் - நீ
கண்டுபிடித்து வரும்
ஒற்றையடி பாதையின்
முடிவில் காத்திருப்பேன்….. – உன்
நிமிட பிரியங்களுக்காக….

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை