Monday, October 7, 2024

18 Years of Cheeni Kum: Film asks women to contain question the "Sweetness" conditioned into us.....



லண்டனைக் கதைக்களமாக கொண்டதொரு திரைப்படம் இது.  நிறைய பெருமைத்தனமும் ஈகோவும் கொண்ட புத்ததேவும் சுதந்திர உணர்வும் யதார்த்த சிந்தனையும் கொண்ட நீனாவும் சந்தித்துக்கொள்வதும் இவர்களுக்கிடையான காதலும் இப்படத்தின் கதை என்று சுருக்கமாக கூறலாம். எனினும் இவ்விரு பாத்திரங்களுக்கிடையான முரண்களின் பட்டியல் மிகவும் நீண்டது.

 
சொந்த உணவகம் ஒன்றை நடாத்தி வருகின்ற Chef புத்ததேவ்விற்கு வயது அறுபதிற்கு மேல். தன் கீழ் பணிபுரிகின்ற ஏனைய Chef களின் சிறு தவறுகளையும் கூட பெரிதாக்கி சத்தமிடுகின்றதொரு கறாரான பாத்திரம். இவ்வாறு நகர்கின்றதொரு நாளில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய உணவு திரும்பி அனுப்பப்படுகின்றது. ஏன் என புத்ததேவ் வினவ இதில் குறை இருப்பதால் குறிப்பிட்ட நபர் திரும்பி அனுப்பி விட்டார் என பதிலளிக்கப்படுகின்றது. யாரந்த நபர் என்று பார்ப்பதற்கு வெளியே வரும் புத்ததேவ் நீனாவை சந்திக்கின்றார். வழமை போன்று தன் பக்கமுள்ள பிழையை ஆராய முன்னர் எல்லார் முன்னிலையிலும் கத்த நீனா ஏதும் பேசாமல் தன் நண்பியுடன் வெளியேறிவிடுகின்றார். அடுத்த நாள் வழமையான இயல்பாக தன்னுடைய பணியாளர்களுடன் கோபத்தில் கத்தும் வேளை அதே பதார்த்தத்தினை மீண்டும் பணியாளர் உள்கொண்டு வருவார். அதனை கேள்வியுடன் நோக்கியவாறு எடுத்து சாப்பிட்டு பார்க்கும் புத்ததேவ் நன்றாயிருப்பதாக கூற பணியாள் அதனை நீனா தான் தந்ததாக தெரிவிக்கின்றார். இவ்வாறானதொரு மோதலில் இருந்து ஆரம்பிக்கின்றது புத்ததேவ் - நீனா காதல். 

வயசானவர்களுக்கே இருக்கின்ற அறளைக்குணம், விறுக்குத்தனம் , முற்கோபம் என புத்ததேவின் இயல்பின் தாக்கங்களுடன் கதை நகர்கின்றது. இதேவேளை வெறும் 30 களில் இருக்கும் பொறியியலாளரான நீனா எல்லாவற்றினையும் இலகுவாக கடப்பதும் புத்ததேவின் விறுக்கு குணத்தினை புன்னகையுடன் கடப்பதும் அழகான கவிதைத்தனம் நிரம்பிய காட்சிகள். இதற்கிடையில் புத்ததேவின் முதுமையான தாய், புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கீமோதெரப்பி பெற்று வருகின்ற பக்கத்துவீட்டு சிறுமி என பல கதாபாத்திரங்களும் பல்வேறுப்பட்ட குணாதிசயங்களுடன் எம்மைக்கடக்கின்றன. தங்களுடைய காதலினை நீனா வீட்டில் சொல்லும் போது தன்னிலும் விட நீனா விரும்புகின்ற புத்ததேவின் வயது அதிகமென்பதால் எதிர்ப்பு ஆரம்பமாகின்றது. இறுதியில் இவர்களது காதல் சேர்கின்றதா இல்லையா என்பதே கதை.

இயக்குநர் ஆர்.பல்கிஸ் அழகாக கதையினை பின்னியுள்ளார். இணையர்களிடையே நேசிக்கும் போது இயல்பாக ஏற்படுகின்ற பொறாமையாக இருக்கட்டும், காதலில் விழுகின்ற இருவரின் குணாதிசயங்களில் காணப்படுகின்ற முரண்களாயிருக்கட்டும் அதனை அவர்கள் கடக்கின்ற விதமாயிருக்கட்டும் , வசனநடை மற்றும் காட்சியமைப்பு அனைத்துமே அருமை. 


என்னுடைய புரிதலின் அடிப்படையில் அழகு , இனிமை என்பதெல்லாம் அவரவர் வரையறையின் அடிப்படை என்பதைப் போன்றே உணவில் உப்பு, புளி, காரம், சீனி போன்றவையும் அவரவர் தேவைக்களவானதாகவே உணரப்படுகின்றது. அவ்வாறே காதலும். ஆதனால் தான் “Cheeni Kum" (குறைவான இனிப்பு) எனப் பொருள்படும் வகையில் தலைப்பிடப்பட்டுள்ளது போலும். தற்போதெல்லாம் அநேகமாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயங்களுள் சிலதை இதனுடன் பொருத்தி பார்க்கலாம். அநேக வயதிடைவெளியில் திருமணம் நடந்தாலோ, உருவ வேற்றுமையுடையவர்கள் காதலித்தாலோ, விவாகரத்தானவர்கள் மறுமணம் செய்தாலோ உடனே முகநூலில் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிடுவார்கள் நம்முடைய அட்டைக்கத்தி நெட்டிசன்கள். அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் வாழ்ந்தாக வேண்டும். அவரவர்களுக்கான இணையர்களது தெரிவும் அவரவரைப் பொறுத்ததே.

இனிமையானதொரு மழைப்பொழுதில் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடியதொரு படம் இது. மொழியொன்றும் பெரிதாக தெரிந்திருந்திருக்க வேண்டியதுமில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்துவிடுங்களேன். உங்கள் கையிலுள்ள உணவில் இருக்கவேண்டிய இனிப்பும் வாழ்வின் இனிமையும் (Sweetness)  உங்கள் தெரிவில் மட்டுமேயுண்டு. அடுத்தவருக்கு என்ன உரிமை இதில்? அனுபவிப்பது நாமல்லவா…  18 Years of Cheeni Kum: Film asks women to contain question the "Sweetness" conditioned into us.....




அதிகம் வாசிக்கபட்டவை