
ஒவ்வொரு மனித விழிகளும் மேலே அண்ணாந்த வண்ணம் கருமுகில்களை தேடுகின்றன. பெருமூச்சுக்கள் வரிவடிவாகி இறைவன் திருவடியில் வினாவாகிறது....”இறைவா மழை பொழியாதா? ஏம் பஞ்சம் தீராதா?”
.................................................................................................
யுத்த காலனால் விரட்டப்பட்டு புலம் பெயர்ந்தோர் வாழும் அகதி முகாம்... நனைந்த பறவைகளாக தம் செயற்பாடுகளை நிறுத்தி கூடாரங்களிலேயே முடங்கி கிடக்கிறார்கள் மக்கள். முழங்காலளவிற்கு பாய்ந்தோடுகிறது வெள்ளம். கால்கள் மரத்துப்போய் கழன்று விட்டது போன்றதொரு பிரமை. பொருட்களை காப்பாற்ற அவற்றை கூடார வளைகளில் கட்டியதில் கூன் விழுந்து நிற்கும் கூரைகள். குழந்தைகளின் ஓலங்கள் ஒரு புறம். ஓரு வாரமாக நீடித்திருக்கும் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட குப்பைகளினால் ஏற்பட்ட நுளம்புப் பெருக்கம் ஒரு புறம். வீட்டிற்கு வீடு நோயாளர்களும் அவர்களின் இருமல் ஈழை ஒலியும் கூட ஓர் சங்கீதமாக ஒலிக்கிறது. அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் பார்த்து உதவிகள் வழங்குகின்றன. அவர்களின் உலர் உணவுகளும் இலவச வைத்திய சேவைகளும் அன்றாட நிகழ்வுகளாகிட முடியுமா?
வானமோ விரிசல் கண்டதைப் போன்று குடம் குடமாக நீரைக் கொட்டுகிறது. எல்லோருடைய மனங்களிலும் வேண்டுதல்கள் அலையாகி இறை பாதம் நனைக்கின்றன...”இறைவா மழை ஒழியாதா? எம் அவலம் தீராதா?”
.......................................................
தன் படைப்பின் விந்தையை எண்ணி இறைவனின் மனதில் கூட குழப்பம்.